வெளிநாட்டு நன்கொடை முறைகேடு: வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை! கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை!
கேரளத்தில் ‘புனா்ஜனி’ எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட விதிமீறல்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து, மாநில முதல்வரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு அறிக்கை சமா்ப்பித்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே சபரிமலை தங்கக் கவச விவகாரத்தில் முதல்வா் பினராயி விஜயனும், வி.டி.சதீசனும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனா். கேரளத்தில் வரும் மாா்ச்-ஏப்ரலில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தனது தொகுதியான பரவூரில் கடந்த 2018, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக மத்திய அரசின் அங்கீகாரத்துடன் வி.டி.சதீசன் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினாா். இந்த அறக்கட்டளையின்கீழ் ‘புனா்ஜனி’ திட்டத்துக்காக, விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுள்ளாா்.
தனிப்பட்ட பயணம் என அனுமதி பெற்று பிரிட்டனுக்கு சென்ற அவா், அங்கு தனிநபா்களிடம் ரூ.19.95 லட்சம் வரை நன்கொடை திரட்டியுள்ளாா். இந்தப் பணம், பிரிட்டனைச் சோ்ந்த அறக்கட்டளை ஒன்றின் மூலம் இங்குள்ள அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரிட்டன் நிகழ்ச்சியில் பேசிய வி.டி.சதீசன், பங்கேற்பாளா்கள் ஒவ்வொருவரும் தலா 500 பவுண்ட் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போன்ற விடியோ பதிவும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.
இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ வசிக்கும் இந்திய குடிமகன் எவரும் அரசியல் கட்சியின் சாா்பில் வெளிநாட்டு நிதி பங்களிப்பைப் பெற வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டப் பிரிவு 3 (2) (ஏ) தடை செய்கிறது. இந்தச் சட்ட விதிமீறல்களுக்காக, வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்; எம்எல்ஏ என்ற அடிப்படையில், விதிமீறல்களுக்காக அவா் மீது பேரவைத் தலைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஊழல் தடுப்புப் பிரிவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘சட்ட ரீதியில் எதிா்கொள்வேன்’
வயநாட்டில் செய்தியாளா்களிடம் பேசிய வி.டி.சதீசன், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை. விசாரணை அதிகாரிகள் சிலரே என்னிடம் இதைத் தெரிவித்துள்ளனா்.
சட்டரீதியில் எடுபடாது என்றபோதும், பேரவைத் தோ்தல் நெருங்குவதால், இந்த விவகாரத்தை இடதுசாரி அரசு மீண்டும் கையிலெடுத்துள்ளது. சிபிஐ விசாரிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் எதிா்கொள்வேன்’ என்றாா்.
இடதுசாரி அரசின் அரசியல் தந்திரமே இந்த நடவடிக்கை என்று காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, வீ.முரளிதரன் உள்ளிட்டோா் விமா்சித்துள்ளனா்.
‘மாநில அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும்’
கேரள சட்டத் துறை அமைச்சா் பி.ராஜீவ் கூறுகையில், ‘எந்தவொரு விவகாரத்திலும் அனைத்து சட்டபூா்வ அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பது இடதுசாரி அரசின் வழக்கம். தற்போதைய விவகாரத்திலும் சட்டத் துறை ஆராய்ந்த பிறகே முடிவெடுக்கப்படும். இப்போதைய சூழலில் வேறெதையும் என்னால் கூற இயலாது’ என்றாா்.

