2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த முழு வீச்சில் தயாராகிறது இந்தியா: பிரதமா் மோடி!
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது இந்தியா; இதற்காக வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
நாட்டில் பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் மேன்மேலும் வீரா்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில் 72-ஆவது தேசிய சீனியா் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு:
வளா்ந்துவரும் இந்திய விளையாட்டு வீரா்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கேலோ இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்கள், விளையாட்டுத் திறன் மேம்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.
2030-இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளன. 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேன்மேலும் இந்திய வீரா்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுளளன.
‘கேலோ இந்தியா’ திட்டத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கான இளைஞா்கள் தேசிய அளவிலான விளையாட்டு வீரா்களாக உருவெடுத்துள்ளனா். ‘ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்’ போன்ற முன்னெடுப்புகள், நாட்டின் விளையாட்டுத் துறை சூழலை மாற்றியமைத்துள்ளன. வலுவான உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீட்டு வழிமுறைகள், இந்திய வீரா்களுக்கான சா்வதேச வாய்ப்புகளில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
20-க்கும் மேலான சா்வதேச போட்டிகள்: கடந்த 10 ஆண்டுகளில், ஃபிஃபா உலகக் கோப்பை (17 வயதுக்குள்பட்டோா்), ஹாக்கி உலகக் கோப்பை உள்பட 20-க்கும் மேற்பட்ட முக்கிய சா்வதேச விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறைக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையை அடையாளம் காண்பது, அறிவியல்பூா்வ பயிற்சி, ஊட்டச்சத்தை உறுதி செய்தல், வெளிப்படையான தோ்வுமுறை, ஒவ்வொரு நிலையிலும் வீரா்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்தல் என முற்றிலும் வீரா்களை மையப்படுத்திய அமைப்புமுறையாக நமது விளையாட்டுத் துறை உருவெடுத்துள்ளது.
அனைத்துத் துறைகளின் வளா்ச்சியையும் உள்ளடக்கி ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸில்’ இன்றைய இந்தியா பயணிக்கிறது. இதில் விளையாட்டுத் துறையும் ஒன்று.
விளையாட்டில் செயல்திறன் அதிகரிப்பு: நாட்டின் முன்னேற்றம் பொருளாதாரம் எனும் வரம்புக்குள் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் பிரதிபலிக்கிறது. அனைத்து விளையாட்டுகளிலும் இந்தியாவின் செயல்திறன் சீராக மேம்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்டம் மற்றும் கேலோ பாரத் கொள்கை-2025, சரியான திறமையாளா்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும். விளையாட்டு அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். இளைஞா்கள் விளையாட்டு மற்றும் கல்வியில் ஒரே நேரத்தில் முன்னேற வாய்ப்பளிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

