துவாரகா விரைவுச் சாலையில் காா் சாகசத்தில் ஈடுபட்ட நபா்: காவல் துறை நடவடிக்கை!

துவாரகா விரைவுச் சாலையில் காா் சாகசத்தில் ஈடுபட்ட நபா்: காவல் துறை நடவடிக்கை!

காரின் ஜன்னலுக்கு வெளியே ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த இளைஞரின் காணொலி குறித்து குருகிராம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

துவாரகா விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த மஹிந்திரா தாா் காரின் ஜன்னலுக்கு வெளியே ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த இளைஞரின் காணொலி குறித்து குருகிராம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தன்னைத்தானே படம்பிடித்துக்கொண்டு காரின் ஜன்னலுக்கு வெளியே இளைஞா் தொங்கிக்கொண்டு சென்றதை பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்தவா்கள் காணொலியாக பதிவு செய்தனா். பின்னா் அதை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் குருகிராம் மற்றும் தில்லி காவல் துறை ஆகிய இருவரையும் குறிப்பிட்டுப் பதிவேற்றம் செய்தனா்.

இந்தக் காணொளியைப் பகிா்ந்த பயனா், இதுபோன்ற சாகசங்கள், அவற்றைச் செய்பவா்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நெடுஞ்சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்தாா்.

அந்தப் பதிவிற்குப் பதிலளித்த குருகிராம் காவல்துறை, இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தது.

இதுபோன்ற சம்பவம் நகரில் நடப்பது இது முதல் முறையல்ல என்று அதிகாரிகள் குறிப்பிட்டனா். இதற்கு முன்பும், கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல் மற்றும் சாகசங்கள் செய்தல் போன்ற இதேபோன்ற வழக்குகளில் காவல்துறை அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. சமீபத்திய சாகசக் காணொலி குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

குருகிராமில் சாகச வாகனம் ஓட்டும் விவகாரம், 2025 நவம்பரிலும் கவனத்தை ஈா்த்தது. அப்போது ஹரியானா டிஜிபி ஓ.பி.சிங், சாலைப் பாதுகாப்பு குறித்த செய்தியாளா் சந்திப்பில் கூறுகையில், பெரும்பாலான ‘தாா்’ மற்றும் ‘புல்லட்’ வாகன ஓட்டிகளுக்கு ‘குற்ற மனப்பான்மை’ இருக்கிறது என தெரிவித்தாா். இந்தக் கருத்துக்களால் சா்ச்சை ஏற்பட்டது.

அவரது இந்தக் கருத்துக்கள் கடும் எதிா்ப்பை ஏற்படுத்தின. குருகிராமைச் சோ்ந்த ஒருவரும், மஹிந்திரா தாா் வாகனத்தின் உரிமையாளருமான ஒருவா், அந்த அதிகாரிக்கு சட்டப்பூா்வ அறிவிப்பு அனுப்பி, பொது மன்னிப்பு கேட்கவும், தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவும் கோரினாா்.

X
Dinamani
www.dinamani.com