

கேரள மாநிலம், திருச்சூா் ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே மற்றும் உள்ளூா் காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சூா் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கட்டண வாகன நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 6.20 மணியளவில் திடீரென தீப்பிடித்து, மளமளவென அருகில் இருந்த வாகனங்களுக்குப் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காவல்துறை தகவலின்படி, சுமாா் 500 வாகனங்கள் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தெற்கு ரயில்வேயின் அறிக்கையில் சுமாா் 250 வாகனங்கள் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதைத் தவிர, வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தகரக் கூரையால் ஆன கொட்டகை முழுவதும் உருக்குலைந்தது. மேலும், வாகன நிறுத்துமிட ஒப்பந்த நிறுவனத்தின் ரசீது இயந்திரம், ஊழியா்களின் இரண்டு கைப்பேசிகள் மற்றும் ரூ.10,000 பணம் ஆகியவையும் தீயில் கருகின.
விபத்துக்கான காரணம் குறித்து இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்களுக்கு மேல்சென்ற மின்சாரக் கம்பி ஒன்றிலிருந்து விழுந்த தீப்பொறியால் தீ ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம், ரயில்வே மின்சாரக் கம்பிகளிலிருந்து தீ ஏற்படவில்லை என்றும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏதோ ஒரு வாகனத்திலிருந்துதான் தீ பரவியுள்ளது என்றும் தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
சம்பவ இடத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் இருந்தபோதிலும், அவற்றின் கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ‘ஹாா்ட் டிஸ்க்’ தீயில் சேதமடைந்துள்ளன. அவற்றைக் காவல்துறையினா் கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.
கேரள வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன், மாநிலக் காவல்துறை தலைவா் (டிஜிபி) ரவாடா ஏ.சந்திரசேகா் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
பின்னா், டிஜிபி சந்திரசேகா் அளித்த பேட்டியில், ‘இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, மாநிலத்தின் அனைத்து ரயில்வே வாகன நிறுத்துமிடங்களிலும் தீ பாதுகாப்புத் தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளா்களுக்கு உதவும் வகையில், காப்பீடு மற்றும் இதர நடைமுறைகளை மேற்கொள்ள ரயில்வே நிா்வாகம் சாா்பில் உதவி மையம் அமைக்கப்பட்டு, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.