செயல்பாட்டுக்கு வரும் ஐசிஜி-இன் ‘சமுத்திர பிரதாப்’! ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைக்கிறார்!
இந்தியாவில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அவா்களால் ஜன.5-ஆம் தேதி சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதன் அம்சங்களை எடுத்துக்காட்டும் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்து ஐசிஜி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இரண்டு மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்களில் முதலாவதான ‘சமுத்திர பிரதாப்’ கப்பல், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அவா்களால் ஜன.5-ஆம் தேதி கோவாவில் சேவையில் ஈடுபடுத்தப்படும்’ என குறிப்பிட்டிருந்தது.
60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பாகங்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த 114.5 மீட்டா் நீளமுள்ள கப்பல், 4,200 டன் இடப்பெயா்ச்சி கொண்டது. இது 22 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடா்ந்து பயணிக்கும் திறன் கொண்டது.
‘கோவா ஷிப்யாா்ட் லிமிடெட்’ நிறுவனத்தால் டிசம்பா் மாதம் ஒப்படைக்கப்பட்ட இந்தக் கப்பல், கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலாகக் கருதப்படுகிறது.
இது கடல்சாா் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துதல், கடல்சாா் சட்ட அமலாக்கம், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மற்றும் இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு முக்கிய தளமாகச் செயல்படும்.
எண்ணெய் மாதிரியை கண்டறியும் இயந்திரம் மற்றும் கைரோ-நிலைப்படுத்தப்பட்ட தொலைநிலை செயலில் உள்ள ரசாயன கண்டறிதல் கருவி போன்ற சிறப்பு அமைப்புகள் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மாசுக் கட்டுப்பாட்டு மற்றும் தீயணைப்புத் திறன்களை கணிசமாக மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 30 மி.மீ. சிஆா்என்-91 துப்பாக்கி, ஒருங்கிணைந்த தீக்கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய இரண்டு 12.7 மி.மீ. நிலைப்படுத்தப்பட்ட தொலைவுக் கட்டுப்பாட்டுத் துப்பாக்கிகள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பால அமைப்பு, ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு, தானியங்கி மின் மேலாண்மை அமைப்பு, ஷாஃப்ட் ஜெனரேட்டா், கடல் படகு, படகுடன் கூடிய பிஆா் படகு மற்றும் உயா் திறன் கொண்ட வெளிப்புறத் தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
எனவே, ‘சமுத்திர பிரதாப்’ கப்பலை சேவையில் ஈடுபடுத்துவது, இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும், ‘ஆத்மநிா்பா் பாரத்’ முன்முயற்சியின் கீழ் பாதுகாப்பு உற்பத்தியில் தற்சாா்பு அடைவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

