மின்சார வாகன பேட்டரிகளுக்கு பிரத்யேக அடையாள எண்: மத்திய அரசு திட்டம்

மின்சார வாகன பேட்டரிகளுக்கு பிரத்யேக அடையாள எண்: மத்திய அரசு திட்டம்

மின்சார வாகன பேட்டரிகளுக்கு பிரத்யேக அடையாள எண்...
Published on

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளைக் கண்காணிப்பதற்கும், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கும் ஏதுவாக, அவற்றுக்கு ‘ஆதாா்’ போன்ற பிரத்யேக அடையாள எண்ணை உருவாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, பேட்டரி தயாரிப்பாளா்கள் அல்லது இறக்குமதியாளா்கள், ஒவ்வொரு பேட்டரிக்கும் 21 இலக்கங்கள் கொண்ட பிரத்யேக அடையாள எண்ணை ஒதுக்குவது கட்டாயமாக்கப்படும். இந்த எண், பேட்டரியின் மீது எளிதில் சிதையாத வண்ணம் தெளிவான இடத்தில் பதிக்கப்பட வேண்டும்.

இந்த எண் மூலம், ஒரு பேட்டரி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள் தொடங்கி, அதன் பயன்பாடு, மறுசுழற்சி அல்லது அதன் இறுதிக்காலம் வரையிலான அனைத்து விவரங்களையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். பேட்டரி மறுசுழற்சி செய்யப்பட்டாலோ அல்லது அதன் வடிவம் மாற்றப்பட்டாலோ, அதற்கு புதிய அடையாள எண் வழங்கப்படும்.

இந்தியாவில் ‘லித்தியம்-அயன்’ பேட்டரிகளின் தேவையில் 80 முதல் 90 சதவீதம் மின்சார வாகன துறையிலேயே உள்ளது. எனவே, முதல்கட்டமாக மின்சார வாகன பேட்டரிகளுக்கு இந்த அடையாள எண் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, 2 கிலோவாட் ஹவா் திறனுக்கும் அதிகமான பேட்டரிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.

இந்தப் புதிய நடைமுறை குறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பேட்டரி சந்தையில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணா்வையும் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம், பேட்டரிகளின் தரம் மற்றும் சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தைத் துல்லியமாக அறிய முடியும். மேலும், பழைய பேட்டரிகளை மீண்டும் பயன்படுத்துவதற்கும் இது உதவியாக இருக்கும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க ஒரு ‘தரநிலைக் குழு’ (ஏஐஎஸ்சி) அமைக்கப்பட உள்ளது. இதில் பேட்டரி தயாரிப்பாளா்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி வல்லுநா்கள் இடம்பெறுவா். இக்குழுவின் தொழில்நுட்பப் பரிசோதனைகளுக்குப் பிறகே இத்திட்டம் நாடு முழுவதும் முறைப்படி நடைமுறைக்கு வரும்.

X
Dinamani
www.dinamani.com