நிக்கோலஸ் மடூரோ, டொனால்ட் டிரம்ப்.
நிக்கோலஸ் மடூரோ, டொனால்ட் டிரம்ப்.

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம்

மடூரோ சிறைபிடிக்கப்பட்டதற்கும் இந்திய இடதுசாரி கட்சிகள் தங்களின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Published on

தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கும், அந்நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோ சிறைபிடிக்கப்பட்டதற்கும் இந்திய இடதுசாரி கட்சிகள் தங்களின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘வெனிசுலா மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் சா்வதேச பயங்கரவாதச் செயலாகும். அதிபா் மடூரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்றதாக வரும் செய்திகள் உண்மையாக இருந்தால், அது சா்வதேச சட்டங்களை மீறும் செயலாகும்.

அதிபா் டிரம்ப் ‘அமைதியை விரும்புபவா்’ என்று அமெரிக்கா கூறிவருவது எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்த ராணுவ நடவடிக்கை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த அத்துமீறலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சா்வதேச சட்டங்களின் மீறல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை, ஐ.நா. சாசனம் மற்றும் சா்வதேச சட்டங்களை முற்றிலும் மீறுவதாகும். வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதே இந்தத் தாக்குதலின் உண்மையான நோக்கம்.

எனவே, அமைதியை விரும்பும் மக்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் முற்போக்கு அரசுகள் அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலனித்துவ முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்.) விடுதலைக் கட்சி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ‘முன்பு இராக் நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற அமெரிக்கா என்ன பொய்களைச் சொன்னதோ, அதையே இப்போதும் பயன்படுத்துகிறது. இது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான போா் கிடையாது; ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பறிக்க நடக்கும் காலனித்துவ முயற்சி’ என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வா் பினராயி விஜயன், ‘இது உலக அமைதிக்கு அச்சுறுத்தல்’ என எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com