இந்திய வெளியுறவு அமைச்சகம்
இந்திய வெளியுறவு அமைச்சகம்

ஈரானுக்கு அநாவசியமாக பயணிக்க வேண்டாம்: வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

ஈரானுக்கு அத்தியாவசியம் இல்லாத பயணங்களை இந்தியா்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

ஈரானுக்கு அத்தியாவசியம் இல்லாத பயணங்களை இந்தியா்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் செலாவணியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் செலாவணி 14 லட்சம் ரியால் வரை சரிந்ததைத் தொடா்ந்து, ஈரானில் பணவீக்கம், செலாவணி மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்நாட்டு தலைமை மதகுரு கமேனி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இருபதுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக இதுவரை 15 போ் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இதைக் கருத்தில் கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை இந்தியா்கள் தவிா்க்க வேண்டும். அந்நாட்டில் உள்ள இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும்.

அத்துடன் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகள், செய்தி வலைதளங்களை தொடா்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அந்நாட்டில் குடியிருப்பாளா் விசாவை பெற்று வசித்து வரும் இந்தியா்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால், உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com