

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு 15வது முறையாக 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம், இதுவரை 405 நாள்கள் பரோலில் வெளியே இருந்துள்ளார்.
திங்கள்கிழமை காலை 40 நாள்கள் பரோலில் வெளியே வரவிருக்கும் குர்மீத் ராம் ரஹீம், சிர்சாவில் உள்ள தேரா தலைமையகத்தில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
ஹரியாணாவின் சுனாரியா சிறைச் சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை பரோலில் வெளிவந்த குர்மீத் ராம், பல்வேறு காரணங்களுக்காக பரோல் பெற்று வருகிறார். கடந்த முறை, ஆகஸ்ட் மாதம் அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 40 நாள்கள் பரோலில் வந்திருந்தார்.
2026ஆம் ஆண்டுக்கான கணக்குத் தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறை குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கப்பட்டுளள்து.
2024ஆம் ஆண்டில், ஜனவரி மாதம் 30 நாள்கள், ஏப்ரல் மாதம் 21 நாள்களும், ஆகஸ்ட் மாதம் 40 நாள்களும் என மொத்தம் ஒரே ஆண்டில் 91 நாள்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.
2025ஆம் ஆண்டும் இதுபோலவே ஜனவரி மாதம் 50 நாள்கள், ஆகஸ்ட் மாதம் 21 நாள்கள், அக்டோபர் மாதம் 20 நாள்கள் என சொல்லிவைத்தது போல 91 நாள்கள் வெளியே இருந்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான கணக்கு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. இவர் 40 நாள்கள் பரோல் முடிந்து பிப்ரவரி மாதம்தான் சிறைக்குச் செல்வார்.
இதுவரை தண்டனை காலங்களில் 405 நாள்கள் சிறைக்கு வெளியே பரோலில் இருந்துள்ளார். பரோலில் வெளியே வருபவர், கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. ஆனால், இவரோ காணொலி வாயிலாக இவரது தொண்டர்கைளை சந்திப்பார். ஓரிடம் என இல்லாமல் பரோல் காலங்களில் பல இடங்களிலும் தங்கியிருப்பார்.
ஹரியாணா, பஞ்சாப், தில்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இவரின் ஆதரவாளர்கள் இருக்கும் நிலையில், அந்த மாநிலங்களின் தேர்தலையொட்டி, குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குர்மீத் ராமுக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் கலந்த வன்முறையில் 40 பேர் பலியாகினர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.