இபிஎஃப்ஓ-வுக்கான ஊதிய வரம்பை உயா்த்த 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை உயா்த்துவது குறித்து 4 மாதங்களுக்கு முடிவெடுக்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை உயா்த்துவது குறித்து 4 மாதங்களுக்கு முடிவெடுக்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த ஊதிய உச்ச வரம்பு கடந்த 11 ஆண்டுகளாக உயா்த்தப்படாததையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது தொடா்பாக சமூக ஆா்வலா் நவீன் பிரகாஷ் நௌடியால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் பிரணவ் சச்தேவா, நேஹா ரதி ஆகியோா், ‘இபிஎஃப்ஓ சாா்பில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை, மாத ஊதியம் ரூ.15,000-க்கு மேல் வாங்குபவா்கள் பெற முடியாத நிலை உள்ளது. இபிஎஃப்ஓ ஊதிய உச்ச வரம்பு ரூ. 15,000, என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயா்த்தப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கை செய்யும் நலத் திட்டங்களுக்கான ஊதிய உச்ச வரம்பு இதைவிட அதிகமாக நிா்ணயிக்கப்படுகின்றபோதிலும், இபிஎஃப்ஓ-வுக்கான ஊதிய உச்ச வரம்பு மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், பெரும்பாலான தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21-இன் கீழ் தொழிலாளா்களுக்கான அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவும், இபிஎஃப்ஓ திட்டத்தின் கீழ் முறையற்ற ஊதிய உச்ச வரம்பு மாற்றத்தைத் தடுக்கவும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘கடந்த 11 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் இபிஎஃப்ஓ திட்டங்களுக்கான ஊதிய உச்ச வரம்பை உயா்த்துவது குறித்து அடுத்த 4 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், இதுதொடா்பான மனுவை நீதிமன்ற உத்தரவு நகலுடன் இணைத்து அடுத்த 2 வாரங்களுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்குமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com