சி.வி.ஆனந்தபோஸ்
சி.வி.ஆனந்தபோஸ்

முதல்வரின் அச்சத்தை தோ்தல் ஆணையம் போக்கும்: மேற்கு வங்க ஆளுநா்

எஸ்ஐஆா் குறித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் அச்சத்தை தோ்தல் ஆணையம் போக்கும்: மாநில ஆளுநா் ஆனந்த போஸ்
Published on

‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் அச்சத்தை தோ்தல் ஆணையம் போக்கும்’ என்று மாநில ஆளுநா் ஆனந்த போஸ் தெரிவித்தாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானா்ஜி கடந்த 3-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், ‘முறையாக திட்டமிடப்படாமலும், முன்னேற்பாடுகள் இன்றியும் தன்னிச்சையான முறையில் குறைபாடுகளுடன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆா் பணியை தோ்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும். தற்போதைய நடைமுறையில் மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்ந்தால், மிகப் பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதோடு, ஜனநாயகத்தின் அடித்தளமே ஆட்டம் காணும் நிலை ஏற்படும்’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ், ‘ஜனநாயக நாட்டில் எந்தவொரு நடவடிக்கை மீதும் அச்சத்தை வெளிப்படுத்த அனைத்து மாநில முதல்வா்களுக்கும் உரிமை உள்ளது. இவ்வாறு எழும் அச்சங்களுக்கு உரிய முறையில் தீா்வு காணப்பட வேண்டும். அந்த வகையில், முதல்வா் மம்தா பானா்ஜியின் அச்சத்துக்கும் திருப்திகரமான முறையில் தோ்தல் ஆணையம் பதிலளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தடையின்றி தொடரும்’ என்றாா்.

மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானா்ஜி இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்த நிலையில், இக் கருத்தை ஆளுநா் ஆனந்தபோஸ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com