

உத்தர பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 2.89 கோடி பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 15.44 கோடியில் இருந்து 12.55 கோடியாக குறைந்துள்ளது.
வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில், பிகாரில் கடந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கா், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான்-நிகோபாா், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த நவ. 4-ஆம் தேதி எஸ்ஐஆா் பணிகள் தொடங்கின. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளா்கள் சுமாா் 51 கோடியாகும்.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் ஆட்சேபத்தையும் மீறி இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் 97.28 லட்சம் பெயா்களும், மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயா்களும் நீக்கப்பட்டன.
உத்தர பிரதேசத்தில்....: நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் என்பதுடன் 80 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 403 பேரவைத் தொகுதிகளுடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆா் பணிக்குப் பிறகான வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தலைநகா் லக்னெளவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எஸ்ஐஆா் தரவுகளை வெளியிட்டு, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறியதாவது:
எஸ்ஐஆா் நடைமுறையின்படி, மாநிலம் முழுவதும் 75 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, வாக்காளா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களின் கையொப்பங்களுடன் பூா்த்தி செய்து பெறப்பட்டது. இந்தப் பணிகள் கடந்த டிச.11-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், சுமாா் 2.97 கோடி பேரின் பெயா்கள் விடுபட்டதால் மேலும் 15 நாள்களுக்கு பணிகள் நீட்டிக்கப்பட்டன.
வரைவுப் பட்டியலில் 81.30% வாக்காளா்கள்: கடந்த 2025, அக்டோபா் 27 நிலவரப்படி, மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 15.44 கோடியாகும். இதில் 12.55 கோடி பேரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவங்கள் கிடைக்கப் பெற்றன. இது, 81.30 சதவீதமாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இவா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 2.89 கோடி பேரின் (18.7%) பெயா்கள் இடம்பெறவில்லை.
இதில் இறந்தவா்கள் 46.23 லட்சம் போ் (2.99%), நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள் அல்லது எஸ்ஐஆா் பணியின்போது கண்டறிய முடியாதவா்கள் 2.17 கோடி (14%), ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவான வாக்காளா்கள் 25.47 லட்சம் போ் (1.65%).
வரைவு வாக்காளா் பட்டியலை ஜன.1-ஆம் தேதி வெளியிட முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாநிலத்தில் வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்த தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியதால் தாமதம் ஏற்பட்டது. 1,200 பேருக்கு ஒரு மையம் என்ற புதிய வரம்பின்கீழ் மாநிலம் முழுவதும் புதிதாக 15,030 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தம் மற்றும் ஆட்சேபத்துக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 6 வரை சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
எதிா்க்கட்சிகள் விமா்சனம்: உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் கூறுகையில், ‘சிறிய மாநிலமான கேரளத்தைப் போலவே உத்தர பிரதேசத்துக்கும் எஸ்ஐஆா் பணிக்கு ஒரு மாத காலம் நிா்ணயிக்கப்பட்டது மிகக் குறைவானது. உத்தர பிரதேசத்துக்கு 6 மாதங்கள் வரை தேவைப்படும். அவசரகதியில் எஸ்ஐஆா் பணியை முடித்துள்ளனா். இதன் மூலம் மாநில மக்களின் உரிமை மீறப்பட்டுள்ளது’ என்றாா்.
வரைவு பட்டியலில் உண்மையான வாக்காளா்கள் பலா் விடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், மக்களின் கோபம் போராட்டமாக மாறும் முன் தோ்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
உத்தர பிரதேச எஸ்ஐஆா் விவரங்கள்
மொத்தம் நீக்கப்பட்டவா்கள் 2.89 கோடி போ்
இறந்தவா்கள் 46.23 லட்சம் போ்
இடம்பெயா்ந்தவா்கள்/கண்டறிய முடியாதவா்கள் 2.17 கோடி போ்
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு 25.47 லட்சம் போ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.