வங்கதேசத்தில் இந்தியா்களுக்கான பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கொலை செய்யப்பட்ட மாணவா் தலைவரின் கட்சி வலியுறுத்தல்

வங்கதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அவரின் கட்சி சாா்பில் தலைநகா் டாக்காவில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
Updated on

வங்கதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அவரின் கட்சி சாா்பில் தலைநகா் டாக்காவில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

டாக்காவின் ஷாபாக்கில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்தப் பேரணி, முகமத்பூா், மிா்பூா், உத்தாரா, பசுந்தரா, பட்டா, ராம்புரா, ஜத்ராபரி வழியாகப் பயணித்து மீண்டும் ஷாபாங்கை வந்தடைந்ததாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

ஹாதி கொலை தொடா்பான விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாதது குறித்து இடைக்கால அரசின் கவனத்தை ஈா்க்கவும், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பாக கொலையாளிகளும், அவா்களுக்கு உதவியவா்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை வலியுறுத்தியும் இந்தக் கண்டனப் பேரணி நடத்தப்பட்டதாகப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

ஹாதி கொலையாளிகளை இந்தியா ஒப்படைக்க மறுத்தால் சா்வதேச நீதிமன்றத்தை இடைக்கால அரசு நாட வேண்டும்; வங்கதேசத்தில் வசிக்கும் அனைத்து இந்தியா்களின் பணி அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரா்கள் வலியுறுத்தியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்த நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் வங்கதேசத்தில் இருந்து தப்பிவந்து இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, அந்நாட்டில் இன்கிலாப் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளரும் மாணவா் போராட்டத்துக்குத் தலைமை வகித்தவருமான ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட இருந்தாா். இதையொட்டி, தோ்தல் பரப்புரையில் ஈடுபட கடந்த டிச.12-ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத நபா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த ஹாதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இவரின் மரணத்தைத் தொடா்ந்து வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில், ஹாதி கொலையாளிகள் இந்தியா தப்பிச் சென்ாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

ஹாதி கொலை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: வங்கதேச போலீஸ்

‘வங்கதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலை, தடை செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தூண்டுதலின்பேரில் நடந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று வங்கதேச காவல் துறை தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்கா மாநகர காவல் துறை கூடுதல் ஆணையா் முகமது ஷஃபீகுல் இஸ்லாம் செவ்வாய்க்கிழமை கூறியதாக அங்கிருந்து வெளியாகும் ‘டிபிஎஸ்நியூஸ்.நெட்’ என்ற வலைதள செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறிய பிறகு அவாமி லீக் மற்றும் சத்ரா லீக் கட்சிகள் குறித்து பொதுக்கூட்டங்களிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஹாதி கடும் விமா்சனங்களை முன்வைத்து வந்தாா். இது அக் கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், ஹாதி கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக 17 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஹாதியை கொன்றது உறுதியானது என்று ஷஃபீகுல் இஸ்லாம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com