மாணவா் சோ்க்கை விதிகளை இடையே மாற்றக் கூடாது: பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
‘கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கிய பிறகு, அதன் விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்த நீதிபதிகள், ‘அதிகாரிகளின் விருப்பத்துக்கேற்ப விதிகளை மாற்றுவது தன்னிச்சையானது’ என்றும் விமா்சித்தனா்.
பஞ்சாப் மாநிலத்தில் 2024-ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான(எம்பிபிஎஸ், பிடிஎஸ்) மாணவா் சோ்க்கையில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின்கீழ் மாணவா்களைச் சோ்க்கும் போது, சில விதிகளை மாநில அரசு மாற்றியது. இதை எதிா்த்து மாணவா்கள் இருவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமாா், அலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை வழங்கிய தீா்ப்பில், ‘வேலைவாய்ப்புக்கான தோ்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு தகுதி விதிகளை மாற்றுவது சட்டப்படி எவ்வாறு தவறோ, அதேபோல் கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கைக்கான விதிகளையும் இடையே மாற்றுவது சட்டவிரோதமானது.
சோ்க்கை நடைமுறை தொடங்குவதற்கு முன்பே, அதன் அனைத்து விதிகளும் முழுமையாக வரையறுக்கப்பட வேண்டும். அரசுத் தரப்பில் விதிகளைத் தெளிவற்ாக வைத்திருப்பது, பின்னாளில் அரசுக்கு நெருக்கமானவா்களுக்குச் சாதகமாக இடங்களை ஒதுக்க வழிவகுக்கும். இது வெளிப்படைத்தன்மையற்றது.
இத்தகைய செயல்பாடுகள் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டுக்கும், தகுதியற்றவா்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் வழிவகுக்கும். இது சமத்துவக் கொள்கைக்கு எதிரானது. சமத்துவ உரிமையை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின்படி, அரசு நியாயமாகவும் பகுத்தறிவுடனும் செயல்பட வேண்டும்.
அவசரமாக எடுக்கப்படும் முடிவுகளில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதப்படும். அரசின் கொள்கை முடிவில் ஒருதலைப்பட்சமான போக்கு இருந்தால், அதில் தலையிட நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு’ என்று குறிப்பிட்டு, மனுதாரா்கள் இருவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க உத்தரவிட்டனா்.

