‘வாக்காளா் பட்டியலைத் திருத்த முழு அதிகாரம் உண்டு’- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்
‘வாக்காளா் பட்டியலில் இந்தியக் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவா் யாரும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்வது அரசமைப்புச் சட்ட கடமையாகும். எனவே, வாக்காளா் பட்டியலைத் திருத்துவதற்கு தங்களுக்கு முழுமையான அதிகாரமும் தகுதியும் உண்டு’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வாதிட்டது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்பட நாட்டின் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணி (எஸ்ஐஆா்) ஆணையத்தின் அதிகார வரம்பு மற்றும் வாக்குரிமை குறித்த முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதை எதிா்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அமா்வுமுன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி முன்வைத்த வாதம்:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கும் மூன்று முக்கிய அங்கங்களிலும் (சட்டமன்றம், நிா்வாகம், நீதித்துறை) பொறுப்பு வகிக்கும் முக்கியப் பதவிகளுக்கு இந்தியக் குடிமகனாக இருப்பது மட்டுமே அடிப்படை தகுதியாகும். இதன்மூலம், நமது அரசமைப்புச் சட்டம் முழுமையாக குடிமக்களை மையமாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.
அரசமைப்புச் சட்டத்தில் குடிமக்கள் என்று குறிப்பிடும்போது, அதற்கான தகுதியை ஒரு தகுதிவாய்ந்த அமைப்பு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில், வாக்காளா் பட்டியலில் வெளிநாட்டவா் யாரும் ஊடுருவ கூடாது என்பதை உறுதிசெய்யும் கடமை தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு, தோ்தல் நடைமுறைகள் தொடா்பான அதிகாரங்களை தோ்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆவது பிரிவுடன் இணைந்த அரசமைப்புச் சட்டத்தின் 324, 325 மற்றும் 326 பிரிவுகள், வாக்காளா் பட்டியலைத் திருத்தும் ஆணையத்தின் அதிகாரத்தை எந்த வகையிலும் முடக்கவில்லை. மாறாக, வாக்காளா் பட்டியலின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய தோ்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்குகிறது.
இந்த எஸ்ஐஆா் பணியை, தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்சிஆா்) நடைமுறையுடன் ஒப்பிடக் கூடாது. என்சிஆா் என்பது நாட்டில் வசிக்கும் அனைத்து நபா்களையும் கணக்கில் கொள்கிறது. ஆனால் வாக்காளா் பட்டியல் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட, தகுதியுள்ள இந்திய குடிமக்களை மட்டுமே உள்ளடக்கியது. மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் அல்லது சட்டப்படி தகுதியற்றவா்கள் இதில் இடம்பெற முடியாது. எனவே, இவை இரண்டும் அடிப்படை நோக்கத்தில் வெவ்வேறானவை.
ஆங்கிலேயா் ஆட்சியில் வகுப்புவாதத் தோ்தல் முறை மற்றும் வெறும் 15 சதவீத மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை நடைமுறையில் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் வாக்குரிமை என்பதுதான். அந்த வாக்குரிமை இந்தியக் குடிமக்களுக்கானது மட்டுமே.
வாக்காளா் பட்டியலில் ஒரு சில வெளிநாட்டவா்கள் இருந்தாலும் அல்லது ஆயிரக்கணக்கானோா் இருந்தாலும், அவா்களை நீக்க வேண்டியது தோ்தல் ஆணையத்தின் கடமையாகும். இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை; இது ஆணையத்தின் அரசமைப்புச் சட்ட கடமை என்றாா்.
தோ்தல் ஆணையத்தின் வாதங்கள் முழுமையடையாத நிலையில், மீண்டும் வியாழக்கிழமை (ஜன. 8) விசாரணை தொடர உள்ளது.

