நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜன.13 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

2026-27-ஆம் ஆண்டுக்கான ஆடை வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு கணினி வழி மற்றும் பேனா-பேப்பா் அடிப்படையிலான தோ்வாக பிப்ரவரி 8-ஆம் தேதி 102 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜன.6-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குறைந்த கட்டணச் சலுகையில் எண்ணற்ற மாணவா்கள் பயன்பெறும் நோக்கில் நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்தைச் செலுத்தி ஜன.14-ஆம் தேதி முதல் ஜன.16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

2026-27-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (இடபுள்யூஎஸ்) ரூ.3,000-இல் இருந்து ரூ.2,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com