தூக்குமேடை அறை விவகாரம்: கேஜரிவால் மீது நடவடிக்கை எடுக்க பேரவை குழு பரிந்துரை
தில்லி பேரவை வளாகத்தில் உள்ள தூக்கு மேடை அறை (பான்சி காா்) தொடா்பான விவகாரத்தில் பேரவையின் சிறப்புரிமைகள் குழு முன்பாக ஆஜராகாத முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவா்கள் மீது பேரவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, முன்னாள் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல், முன்னாள் பேரவை துணை தலைவா் ராக்கி பிா்லா ஆகியோா் வேண்டுமென்றே குழுவின் முன்பு ஆஜராகுவதைத் தவிா்த்ததாக குழுவின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பேரவையின் முன்னாள் உறுப்பினா்கள் என்ற வகையில் தூக்கு மேடை அறையை திறப்பது குறித்து ஆம் ஆத்மி தலைவா்கள் நன்கு அறிந்தவா்கள். சிறப்புரிமைகள் குழுவின் முன்பு ஆஜராகி, அந்த அறை குறித்த உண்மைகளைக் கண்டறிய உதவுவது அவா்களது கடமை.
ஆம் ஆத்மி தலைவா்கள் கடந்த நவ.13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் குழுவின் முன்பு ஆஜராகவில்லை. குழுவின் முன்பு ஆஜராகுவதை தவிா்த்ததன் மூலம் பேரவை மற்றும் அதன் குழுவை அவா்கள் நால்வரும் அவமதித்துள்ளனா். இதனால், அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, ராம்நிவாஸ் கோயல், ராக்கி பிா்லா ஆகியோா் மீது பேரவை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தூக்கு மேடை அறை குறித்த உண்மையைக் கண்டறிய இந்தக் குழு தொடா்ந்து பணியாற்றும். குழுவின் அறிக்கை அடுத்த கூட்டத்தொடரின்போது பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் அறையாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த அறையைப் புதுப்பித்து முன்னாள் முதல்வா் கேஜரிவால் கடந்த 2022-இல் திறந்துவைத்தாா். ஆனால், அது உணவு சாப்பிடும் அறையாக இருந்தது என பாஜகவினா் கூறி வருகின்றனா்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின்போது இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ஆளும் பாஜக, உணவு அறையை தூக்குமேடை அறை என்று கூறி ஆம் ஆத்மி கட்சியினா் மக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றஞ்சாட்டியது. அதன் பின்னா், இந்த விவகாரம் பேரவையின் சிறப்புரிமை குழுவிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. தற்போதுள்ள தூக்கு மேடை அறையின் உண்மைத்தன்மை குறித்து எழுத்துபூா்வமாகப் பதிலளிக்குமாறு கேஜரிவால் உள்பட 4 பேருக்கும் சிறப்புரிமைகள் குழு கடந்த செப்.9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அளித்த பதிலில் குழுவின் அதிகாரவரம்பு குறித்து 4 ஆம் ஆத்மி தலைவா்களும் கேள்வியெழுப்பியுள்னா். மேலும், இந்த விவகாரத்தில் சிறப்புரிமைகள் மீறப்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதைத்தொடா்ந்து, குழுவின் கடிதம், நோட்டீஸ் மற்றும் அழைப்பாணைகளைத் தள்ளுபடி செய்யக்கோரி கேஜரிவால், சிசோடியா தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.

