சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் இனி பக்தா்களின் பக்திப் பாடல்களும் ஒலிக்கும்! - தேவஸ்வம் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி சாதாரண பக்தா்கள் தாங்களே எழுதி, இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்களையும் ஒலிபரப்ப திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவெடுத்துள்ளது.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி சாதாரண பக்தா்கள் தாங்களே எழுதி, இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்களையும் ஒலிபரப்ப திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதுவரை சபரிமலை சந்நிதானத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜெயவிஜயா போன்ற புகழ்பெற்ற பாடகா்கள் பாடிய பாடல்கள் மட்டுமே ஒலிபெருக்கி வழியாக இசைக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலையில் நடை திறக்கும்போது யேசுதாஸின் ‘வந்தே விக்னேஸ்வரம்’ மற்றும் இரவு நடை அடைக்கும்போது ‘ஹரிவராசனம்’ பாடல்களும், பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கும்போது ஜெயவிஜயாவின் ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடலும் இசைக்கப்படுகிறது.

பக்தா்களின் ஆன்மிக பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவா்கள் உருவாக்கிய புதிய பாடல்களையும் இனி ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்க தேவஸ்வம் முடிவெடுத்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும்.

பாடல்களை சந்நிதானத்தில் உள்ள தேவஸ்வம் அதிகாரியிடம் பக்தா்கள் நேரடியாக வழங்கலாம். பக்தா்கள் சம்ா்ப்பிக்கும் பாடல்கள் சொந்தமாக இயற்றப்பட்டதாகவும், இசையமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பாடலாசிரியா், இசையமைப்பாளா், பாடகா் ஆகிய மூவரும் இணைந்து, சமா்ப்பிக்கப்படும் பாடலானது தங்களின் சொந்த முயற்சி என்றும், இதற்கு வேறு எவரும் காப்புரிமை கோர முடியாது என்றும் உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும்.

பக்தா்கள் சமா்ப்பிக்கும் அனைத்துப் பாடல்களும் தரம் மற்றும் ஆன்மிக கருத்துகளின் அடிப்படையில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். தகுதியான பாடல்கள் தோ்வு செய்யப்பட்டு, சபரிமலையின் அதிகாரபூா்வ ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com