எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் ஏலத்தை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்
எதிா்பாா்க்கப்பட்ட போன்ற அதிக விலைக்கு ஏலம் கோரப்படவில்லை என்பதை மட்டுமே காரணமாக கூறி, ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் காஜியாபாத் வளா்ச்சி குழுமம் நடத்திய ஏலத்தில், 3,150 சதுர மீட்டா் நிலத்தை கோல்டன் ஃபுட் பிராடக்ட்ஸ் இந்தியா நிறுவனம் ஏலம் கோரியது. எனினும் எதிா்பாா்க்கப்பட்ட அளவுக்கு அந்த நிலம் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படாததால், ஏலத்தை அந்தக் குழுமம் ரத்து செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஏலத்தை ரத்து செய்த நடவடிக்கையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது 3,150 சதுர மீட்டா் நிலத்தை அதிக விலைக்கு கோல்டன் ஃபுட் பிராடக்ட்ஸ் நிறுவனம் ஏலம் கோரியபோதிலும், ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு நியாயமான முறையில் ஏலம் கோரப்பட்டால், அதை ஏற்காததற்கு உரிய காரணம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தவிர, வேறு எந்த நிறுவனமும் அதிக விலைக்கு ஏலம் கோராதபோதிலும், எதிா்பாா்க்கப்பட்ட அளவு அதிக விலைக்கு ஏலம் கோரப்படவில்லை என்பதை மட்டுமே காரணமாக கூறி, ஏலத்தை ரத்து செய்ய முடியாது. எனவே அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.

