

நாட்டின் தலைசிறந்த சூழலியல் அறிஞர் மாதவ் காட்கில் வயது மூப்பு காரணமாக புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 83.
சூழலியல் முன்னோடியான மாதவ் காட்கிலுக்கு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் "புவிக் கோளத்தின் வாகையாளர்" (சாம்பியன் ஆஃப் தி எர்த்) என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் 1942 ஆம் ஆண்டு பிறந்த மாதவ் காட்கில், இந்திய சூழலியல் மற்றும் கல்வித்துறை ஆராய்ச்சியில் ஒரு முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார்.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிய மாதவ் காட்கில், அங்கு சூழலில் அறிவியல் மையத்தை உருவாக்கினார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராகப் பணியாற்றிய காட்கில், மலையின் பாதுகாப்புக்கான முழுமையான செயல்திட்டங்களை கொண்ட ‘மாதவ் காட்கில் அறிக்கை’யைத் தாக்கல் செய்தார்.
மாதவ் காட்கில் தாக்கல் செய்த அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சூழலியல் இடங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டு, எந்தந்த வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதி அளிக்கலாம் அல்லது அளிக்கக் கூடாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், அந்த அறிக்கையை அமல்படுத்தாமல் கர்நாடகம் மற்றும் தென் மாநில அரசுகள் கிடப்பில் போட்டுவிட்டது.
அந்தக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையைத் தயாரித்தது. அதில் சூழலியல் மண்டலங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டு, எந்தெந்த வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதி அளிக்கலாம் அல்லது அளிக்கக்கூடாது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை பின்னர் கர்நாடகா மற்றும் பிற தென் மாநில அரசுகளால் கிடப்பில் போடப்பட்டது.
காட்கில், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பல்லுயிர் சட்டத்தை உருவாக்குவதிலும், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மக்கள் தொகை உயிரியல், பாதுகாப்பு உயிரியல், மனித சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் வரலாறு ஆகிய துறைகளில் அவர் 250-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில், வயது மூப்புக் காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த காட்கில், புணேவில் புதன்கிழமை இரவு காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.