ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை! நேரில் வந்த மமதா பானர்ஜி

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடந்த போது மமதா பானர்ஜி நேரில் வந்ததால் பரபரப்பு
மமதா பானர்ஜி
மமதா பானர்ஜி
Updated on
1 min read

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வீடு மற்றும் ஐ-பேக் அலுவலகத்தில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பிரதிக் ஜெயின் இல்லத்தில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் ஐ பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டிருந்தது.

இந்தியாவின் முன்னணி தொழில்முறை அரசியல் ஆலோசனை மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை நிறுவனமாக செயல்படும் ஐ-பேக் நிறுவனராக பிரதிக் ஜெயின் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், பிரதிக் வீடு மற்றும் ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. எங்கள் கட்சியின் முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை மூலம் கைப்பற்ற அமைச்சர் அமித் ஷா முயற்சிப்பதாக சோதனை நடக்கும் இடத்துக்கு நேரில் வந்த மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

ஆனால், சோதனை நடந்தபோது மமதா உள்ளே புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்றார் எனவும், எங்களது பணிக்கு முதல்வர் மமதா இடையூறு ஏற்படுத்தினார் எனவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.

பண மோசடி தொடர்பாக வந்த புகார்கள் மீதுதான் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதாக அதிகாரிகள் கூறினாலும், அரசியல் பின்னணி காரணமாகவே சோதனை நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எங்களது தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வீட்டில் சோதனை நடக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த விவரங்களையும், கட்சியின் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றவே இந்த சோதனை நடக்கிறது.

அனைத்துக் கட்சிகளின் ஆவணங்களையும் எடுத்துச் செல்வதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அமலாக்கத் துறையின் வேலையா? ஏற்கனவே, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். தற்போது தேர்தல் நடைபெறவிருப்பதால் எங்கள் கட்சியின் அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத் துறை எடுத்துச் செல்கிறது.

எங்கள் ஆவணங்கள், கொள்கைகள், எங்கள் வாக்காளர்கள், தரவுகள் எங்கள் மேற்கு வங்கத்தை நீங்கள் திருட முயற்சிக்கிறீர்கள். இதையெல்லாம் செய்வதன் மூலம் மேற்கு வங்கத்தில் நீங்களும் பெறும் தொகுதிகள் பூஜ்யமாகத்தான் ஆகப்போகிறது. மன்னிக்கவும் பிரதமர் அவர்களே, உங்கள் உள்துறை அமைச்சரைக் கட்டுப்படுத்துங்கள் என்று மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

Summary

Mamata Banerjee's presence in person during Enforcement Directorate raid at I-PAC office creates stir

மமதா பானர்ஜி
பொங்கல் பரிசுத் தொகை! டோக்கன் வாங்காதோர் என்ன செய்ய வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com