மணிப்பூா் வன்முறை: சா்ச்சைக்குரிய ஆடியோ பதிவை 
ஆய்வுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூா் வன்முறை: சா்ச்சைக்குரிய ஆடியோ பதிவை ஆய்வுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினரிடையேயான மோதலில் அம்மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங்கை தொடா்புபடுத்தும் சா்ச்சைக்குரிய 48 நிமிஷ ஆடியோ பதிவை முழுமையாக தடயவியல் ஆய்வுக்குள்படுத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வன்முறை நிலவியது. இதில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்தனா்.

இந்த வன்முறை காரணமாக மாநில முதல்வா் பதவியை பிரேன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜிநாமா செய்தாா். தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

முன்னதாக குகி சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டி மனித உரிமைகள் அறக்கட்டளைக்கான குகி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இதுதொடா்பாக கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் சா்ச்சைக்குரிய 48 நிமிஷ ஆடியோ பதிவு குறித்து தடயவியல் துறை சமா்ப்பித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ஆய்வுசெய்தது. மேலும், இந்த விவகாரத்தில் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய மணிப்பூா் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்பிறகு நவ.3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஆடியோ பதிவில் அதிக குறுக்கீடுகள் இருப்பதாக தடயவியல் துறை தெரிவித்ததை உச்சநீதிமன்றம் கவனத்தில்கொண்டது.

அதைத்தொடா்ந்து நவ.20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆடியோ பதிவில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதை மனுதாரா்கள் கூறியதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதன் தொடா்ச்சியாக டிச.15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முழு ஆடியோ பதிவும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இதுதொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமாா் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முன்னாள் மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் பேசும் 48 நிமிஷ முழு ஆடியோ பதிவும் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படுகிறது. இதை முழுமையாக ஆய்வுசெய்து விரைவில் சீலிடப்பட்ட உறையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com