சபரிமலை தங்கக் கவச வழக்கு: தேவஸ்வம் வாரிய முன்னாள் செயலா் எஸ்ஐடி விசாரணைக்கு ஆஜா்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் செயலா் எஸ்.ஜெயஸ்ரீ, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் வியாழக்கிழமை ஆஜரானாா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் சிலைகள், அருகேயுள்ள இரு தூண்கள் மற்றும் கருவறைக் கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசிய செப்புக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, கேரள உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி, இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. தங்கக் கவச புதுப்பிப்பு பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி, கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக் கடை அதிபா் கோவா்தன் ரோட்டம் உள்பட 10 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.
கைதானவா்களில் இருவா் தேவஸ்வம் உறுப்பினா்களாக செயலாற்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ-க்களாவா்.
பங்கஜ் பண்டாரி, கோவா்தன் ஆகியோரிடம் இருந்து இதுவரை 575 கிராமுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், மேலும் தங்கம் மாயமாகி இருக்கலாம் என எஸ்ஐடி சந்தேகிக்கிறது. அதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவஸ்வம் வாரிய முன்னாள் செயலா் ஜெயஸ்ரீ, திருவனந்தபுரத்தில் எஸ்ஐடி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜரானாா். இவா், கடந்த 2019-இல் தேவஸ்வம் வாரிய செயலராகப் பணியாற்றியவா்.
குற்றச்சாட்டு என்ன?: தங்கக் கவச வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4-ஆவது நபரான ஜெயஸ்ரீ, சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதை கருத்தில்கொண்டு, அவருக்கு கைது நடவடிக்கையில் இருந்து உச்சநீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஜெயஸ்ரீ உத்தரவின்பேரில்தான், தங்கக் கவசங்கள் உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டன என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.
ஆனால், வாரிய முடிவின்படியே அந்த உத்தரவைப் பிறப்பித்ததாக நீதிமன்றத்தில் ஜெயஸ்ரீ தெரிவித்திருந்தாா். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தாா்.
கேரளத்தில் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், சபரிமலை தங்கக் கவச விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இவ்வழக்கில் விசாரணையை நிறைவு செய்ய எஸ்ஐடி-க்கு கூடுதலாக 6 வார கால அவகாசத்தை உயா்நீதிமன்றம் அண்மையில் வழங்கியது.

