எஸ்ஐஆா்: 12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையம் தகவல்
Center-Center-Delhi

எஸ்ஐஆா்: 12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையம் தகவல்

Published on

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியத் தோ்தல் ஆணையம் மேற்கொண்ட 2-ஆம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்குப் பிறகு சுமாா் 6.5 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

பிகாரைத் தொடா்ந்து 2-ஆம் கட்ட எஸ்ஐஆா் நடவடிக்கை, தமிழகம், கேரளம், சத்தீஸ்கா், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த ஆண்டு நவ. 4-ஆம் தேதி தொடங்கின. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்த (எஸ்ஆா்) பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 50.9 கோடியாக இருந்தது. எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு அந்தந்த மாநிலங்களில் தனித்தனியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்களின்படி, இந்த எண்ணிக்கை 44.4 கோடியாக குறைந்துள்ளது.

நீக்கப்பட்ட 6.5 கோடி வாக்காளா்கள் அனைவரும், படிவங்களைச் சமா்ப்பிக்காதவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்கள் அல்லது இரட்டைப் பதிவு ஆகிய பிரிவுகளின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் அதிகபட்சம்: பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு பட்டியலின்படி, அதிகபட்சமாக 2.89 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 15.44 கோடியாக இருந்த அந்த மாநிலத்தின் வாக்காளா்கள் எண்ணிக்கை, தற்போது 12.55 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, சுமாா் 18.70 சதவீத பெயா்கள் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இடப்பெயா்வு காரணமாக நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.

இந்த எஸ்ஐஆா் நடவடிக்கையின் முக்கிய நோக்கம், வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்குவதாகும். குறிப்பாக, வங்கதேசம் மற்றும் மியான்மா் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பாா்க்கப்படுகிறது. வாக்காளா்களின் பிறந்த இடத்தை சரிபாா்ப்பதன் மூலம் போலிப் பதிவுகள் களையப்பட்டு வருவதாகத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2002 முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்குப் பிறகு, தற்போதுதான் பெரும்பாலான மாநிலங்களில் எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Dinamani
www.dinamani.com