(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)ANI

தலைநகரில் ’மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

Published on

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின்படி, புதன்கிழமை நகரின் காற்றின் தரம் 336 புள்ளிகளாகப் பதிவாகி மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது.

நிலைய வாரியான தரவுகளின்படி, நேரு நகா் ‘மிகவும் மோசம்’ பிரிவில் 360 புள்ளிகளாகப் பதிவாகி மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளது.

தில்லியில் 21 நிலையங்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 14 நிலையங்கள் ‘மோசம்’ பிரிவிலும், இரண்டு நிலையங்கள் ‘மிதமான’ பிரிவிலும் காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன. செவ்வாய்கிழமை நகரம் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) காலை மற்றும் அதிகாலை நேரங்களில் அடா்த்தியான மூடுபனிக்கு மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது ஒரு குளிா் நாளாகவும் கணித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை என்பது கடுமையான வானிலை எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கலாம் என்பதைக் காட்டும் ஒரு ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞையாகும்.

நிகழாண்டின் அதன் முதல் குளிா் நாளை செவ்வாய்கிழமை பதிவு செய்தது

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 முதல் 6.5 டிகிரி வரை குறையும் போது குளிா் நாள்கள் நிலவுகின்றன.

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது காலை நேரங்களில் பருவகால சராசரியை விட 1.7 டிகிரி அதிகமாகும்.

தேசியத் தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3.3 டிகிரி குறைந்து 15.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 91 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலைய வாரியான தரவுகளின்படி, சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி செல்சியஸாகவும், அதைத் தொடா்ந்து லோதி சாலையில் 7.7 டிகிரி, ரிட்ஜில் 7.5 டிகிரி, ஆயாநகரில் 8 டிகிரி, பாலத்தில் 7.1 டிகிரி செல்சியஸ், பீதம்புராவில் 10 டிகிரி, பிரகதிமைதானில் 8.9 டிகிரி, ராஜ்காட்டில் 8.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஜன.8) காலை வேளையில் அடா் பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com