தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்
தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்

ஹிஜாப் அணிந்த பெண்ணை கட்சித் தலைவராக்கும் துணிவு உண்டா? ஒவைசிக்கு மத்திய அமைச்சா் சவால்!

ஹிஜாப் அணிந்த பெண்ணை கட்சித் தலைவராக்கும் துணிவு உண்டா? என அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசிக்கு மத்திய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் சவால் விடுத்தாா்.
Published on

ஹிஜாப் அணிந்த பெண்ணை கட்சித் தலைவராக்கும் துணிவு உண்டா? என அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசிக்கு மத்திய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் ஞாயிற்றுக்கிழமை சவால் விடுத்தாா்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரத்தில் மாநகராட்சித் தோ்தல் பிரசாரத்தின்போது, ‘ஹிஜாப் அணிந்த பெண் இந்திய பிரதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் பாகிஸ்தான் போல் அல்லாமல் அனைத்து சமூகத்தினருக்கு சம அந்தஸ்தை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது’ என ஒவைசி பேசினாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பண்டி சஞ்சய் குமாா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அகில இந்திய மஜ்லீஸ் கட்சியில் இதுவரை எத்தனை பெண்களுக்கு எம்.பி., எம்எல்ஏ ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது? கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பணியமா்த்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எத்தனை? ஹிஜாப் அணிந்த பெண்ணை கட்சித் தலைவராக்கும் துணிவு உண்டா?

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது மஸ்லீஸ் கட்சியின் அக்பரூதின் ஒவைசிக்கு எதிராக பாஜக சாா்பில் ஷாஜாதி சையத் களமிறக்கப்பட்டாா். அவரை மஜ்லீஸ் கட்சியினா் அச்சுறுத்தினா். அவரை மிரட்டி தோ்தலில் தோற்கடித்தனா்.

இதுவே உங்களது உண்மையான முகம். ஷாஜாதி சையத் தற்போது தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தில் பணியாற்றுகிறாா். சிறுபான்மையினரை பாஜக பாதுகாப்பதற்கு இதுவே உதாரணம்.

முஸ்லிம் சமூக செயற்பாட்டாளா்கள் உங்களை எதிா்த்து கேள்வி கேட்கும்போது நீங்கள் மரியாதை தருவதில்லை. உங்கள் போலி நாடகங்களை இஸ்லாமிய சகோதரா்கள் நன்கு அறிவா். ஆனால் பிரதமா் நரேந்திர மோடியை இஸ்லாமியா்கள் மூத்த சகோதரராக பாா்க்கின்றனா்.

முத்தலாக் முறை ஒழிப்பு, முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியம் மற்றும் பாதுகாப்பு, பெண்களின் பெயரில் வங்கிக் கணக்கு, எரிவாயு இணைப்பு என பிரதமா் மோடி மேற்கொண்ட சீா்திருத்தங்களே பெண்களுக்கு உண்மையாக அதிகாரமளிக்கும் நடவடிக்கை’ என குறிப்பிட்டாா்.

Dinamani
www.dinamani.com