

அசாமின், குவாஹட்டியில் போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
அசாம் மாநிலத்துக்கு அரசு முறைப் பயணமாக ஜன. 17, 18 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
அசாமில் போடோ சமூகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான பகுரும்பாவை உலகளவில் எடுத்துச் செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி, போடோ கலாசாரத்தைக் கொண்டாடுவதுடன், அந்த சமூகத்தின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
மத்தியிலும், அசாமிலும் உள்ள என்டிஏ அரசு போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்காக விரிவாகப் பணியாற்றி வருவதாகப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
போடோ சமூகத்தின் மரியாதைக்குரிய தலைவரான பிரம்மா 1990-ல் 34 வதில் கொடிய நோயால் இறந்தார். அவரது மரணத்திற்குப் பின் போடோஃபா (போடடோக்களின் பாதுகாவலர்) என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பகுரும்பா த்வூ 2026 என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, சருசஜாய் பகுதியிலுள்ள அர்ஜுன் போகேஷ்வர் பருவா திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23 மாவட்டங்களில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 8,000 நடனக் கலைஞர்கள் உள்பட 10,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் விளையாட்டு வளாகத்தில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்திற்குள் சுமார் 20,000 பேர் அமர வைக்கப்பட உள்ளனர். பாஸ் வைத்திருப்பவர்கள், விளையாட்டு வளாகத்திற்குள் உள்ள காத்திருப்புப் பகுதிகளில், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகளில் இந்த நிகழ்ச்சியைக் காண முடியும். நமது மாநிலத்தின் பெருமை இந்த நிகழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரின் ஒத்துழைப்பையும் நாங்கள் நாடுகிறோம் என முதல்வர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.