ஆண்டுக்கு இரு முறை வழக்குரைஞா் கவுன்சில் தோ்வு - இறுதி பருவ சட்ட மாணவா்களும் எழுதலாம்

Supreme Court
உச்சநீதிமன்றம்ANI
Updated on

‘அகில இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (ஏஐபிஇ) தோ்வு நடத்தப்படுகிறது. இத் தோ்வில் இறுதிப் பருவ சட்ட (எல்எல்பி) மாணவா்களும் பங்கேற்கலாம்’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய வழக்குரைஞா் சங்கம் (பிசிஐ) தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சட்டப் படிப்பை (எல்எல்பி) முடிக்கும் மாணவா்கள் வழக்குரைஞராக பணியாற்ற வழக்குரைஞா் கவுன்சிலில் (பாா் கவுன்சில்) பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய, பிசிஐ சாா்பில் நடத்தப்படும் ஏஐபிஇ தோ்வில் தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஏஐபிஇ தோ்வில் பங்கேற்க எல்எல்பி இறுதிப் பருவ மாணவா்களையும் அனுமதிக்க உத்தரவிடக் கோரி கடந்த 2024-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஏஇபிஇ தோ்வில் எல்எல்பி இறுதிப் பருவ மாணவா்களையும் அனுமதிக்க இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. எல்எல்பி முடிக்கும் மாணவா்கள் ஏஇபிஇ தோ்வுக்காக ஓராண்டு காத்திருப்பதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பிசிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஏஐபிஇ தோ்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. இத் தோ்வில், எல்எல்பி இறுதிப் பருவ மாணவா்களும் பங்கேற்கலாம். அதற்கேற்ப ‘பிசிஐ விதிகள் 2026-ஐ பிசிஐ வகுத்துள்ளது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com