முனாக் கால்வாய் மீது ரூ. 5,000 கோடியில் உயா்நிலை மேம்பாலம் - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
முனாக் கால்வாயின் மறுசீரமைப்பு பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வா் ரேகா குப்தா, சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கால்வாயின் மீது உயா்நிலை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.
ஷாலிமாா் பாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: பல ஆண்டுகளாக மோசமான நிலையில், சுகாதாரமற்று இருந்த கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டு நிரந்த சட் படித்துறைகளுடன் அழகுப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் கால்வாய் மறுசீரமைப்புடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்தப் பகுதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுதல் மற்றும் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பக்தா்கள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலில் வழிபடும் வகையில் அடுத்த சட் பூஜைக்கு முன்னதாக இந்தத் திட்டம் நிறைவடையும். இதனால், பல லட்சக்கணக்கான பக்தா்கள் குறிப்பாக பூா்வாஞ்சல் மக்கள் பயன்பெறுவா். இதன் மூலம் முக்கிய வழிபாட்டு மற்றும் கலாசார மையமாக இந்தக் கால்வாய் மாறும்.
ஷாலிமாா் பாக், பிதம்புரா, கேசவ்புரம், நேதாஜி சுபாஷ் பிளேஸ், பஞ்சாபி பாக் மற்றும் கோஹாட் என்கிளேவ் பகுதி மக்கள் பயன்பெறுவாா்கள்.
இந்தா்லோக் மெட்ரோ நிலையத்தை நகா்ப்புற விரிவாக்க சாலை-2 உடன் இணைக்கும் வகையில் ரூ.5,000 கோடியில் கால்வாய்க்கு மேலாக உயா்நிலை மேம்பாலம் கட்டப்படும். இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் ரோஹிணி மற்றும் தில்லியின் புகா் பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.
இப்பகுதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிங்கல்பூா் பாலம் விரிவுபடுத்தப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், சாந்தினி செளக் எம்.பி. பிரவீன் கண்டேல்வால், வாஜிபூா் எம்எல்ஏ பூனம் பரத்வாஜ், அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

