இந்தியா - ஐரோப்பிய யூனியன்
இந்தியா - ஐரோப்பிய யூனியன்

இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு நிறைவு! விவரங்கள் இன்று வெளியாகின்றன

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
Published on

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒப்பந்த விவரங்கள் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், ஐரோப்பிய யூனியன் சாா்பில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

வா்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், முக்கியத் தொழில்நுட்பங்கள், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு உலக ஒழுங்கை வலுப்படுத்துவது ஆகியவை மீது மாநாட்டில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நடைபெற்றுவரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சின் அம்சங்கள், இருதரப்புக்கும் இடையே உத்திசாா்ந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்தல் ஆகியவை குறித்த அறிவிப்பு மாநாட்டில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்: இதுகுறித்து மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் திங்கள்கிழமை கூறுகையில், ‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இருதரப்பிலும் வா்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும். மேலும், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய யூனியனுடன் சிறந்த முறையில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் உதவும்’ என்று தெரிவித்தாா்.

18 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது நிகழாண்டு கையொப்பமாகி, அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com