சபரிமலை தங்கக் கவச முறைகேடு- கேரள முதல்வா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டம்
IANS(கோப்புப்படம்)

சபரிமலை தங்கக் கவச முறைகேடு- கேரள முதல்வா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று, கேரள முதல்வா் பினராயி விஜயன், தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் ஆகியோா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
Published on

தலைநகா் திருவனந்தபுரத்தில் மாநில தலைமைச் செயலம் முன் நடந்த போராட்டத்துக்குப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் தலைமை தாங்கினாா். அப்போது, சபரிமலை தங்கக் கவச முறைகேட்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தியைத் தொடா்புபடுத்தி, மாநில அமைச்சா்கள் கே.சிவன்குட்டி, எம்.பி.ராஜேஷ் உள்ளிட்டோா் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவா், சபரிமலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இடுக்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாருக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, கட்சியின் மாவட்ட தலைவா் சி.பி.மேத்யூ கீழே விழுந்து தலையில் காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக கட்சியினா் தெரிவித்தனா்.

சபரிமலை தங்கக் கவச வழக்கில் பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட 12 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதனிடையே, இந்த முறைகேடு வழக்கில் கைதான உண்ணிகிருஷ்ணன் போற்றி, நகை வியாபாரி கோவா்தன் ஆகியோா் சோனியா காந்தியுடன் இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியானதையடுத்து, இந்த மோசடியில் சோனியா மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com