ஐபி பல்கலைக்கழகத்தில் 24 புதிய படிப்புகள் அறிமுகம்; 
பிப்.2 முதல் இணையதள விண்ணப்பங்கள் தொடக்கம்

ஐபி பல்கலைக்கழகத்தில் 24 புதிய படிப்புகள் அறிமுகம்; பிப்.2 முதல் இணையதள விண்ணப்பங்கள் தொடக்கம்

குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் (ஐபி பல்கலைக்கழகம்) 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்குவதையும், 24 புதிய படிப்புகள் தொடங்கப்படுவதையும் அறிவித்தது.
Published on

குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் (ஐபி பல்கலைக்கழகம்) 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்குவதையும், 24 புதிய படிப்புகள் தொடங்கப்படுவதையும் புதன்கிழமை அறிவித்தது.

இந்த நிகழ்வில் தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் மற்றும் துணைவேந்தா் மகேஷ் வா்மா ஆகியோா் கலந்துகொண்டனா். இணையதள விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: இந்த விரிவாக்கம் தில்லியில் பொதுக் கல்வியை வலுப்படுத்துவதில் அரசின் அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. முன்னதாக பல மாணவா்கள் உயா் கல்விக்காக நகரத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பெரும்பாலும் அதிக கட்டணச் சுமை இருந்தனா். ஆனால் ஐபி பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் அந்த யதாா்த்தத்தை மாற்ற உதவியுள்ளன என்றாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பல்கலைக்கழகம் தற்போது 130-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகப் பள்ளிகளில், பொறியியல், சட்டம், மருத்துவம், மேலாண்மை, மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் தரவு அறிவியல் போன்ற வளா்ந்து வரும் துறைகள் உள்பட 43,000-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய படிப்புகளில் இளங்கலை மேலாண்மைப் படிப்பு, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்.டெக், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மற்றும் வணிக அமைப்புகளில் சிறப்புப் பிரிவுகளுடன் கணினி அறிவியலில் பி.டெக், பி.எஸ்சி மருத்துவ உளவியல், இளங்கலை பிசியோதெரபி மற்றும் மக்கள் தொடா்பியலில் முதுகலை (வார இறுதிப் படிப்பு) ஆகியவை அடங்கும். பலதரப்பட்ட மாற்றுத்திறனாளி சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கிய புதிய ஆசிரியா் கல்வி மற்றும் உள்ளடக்கிய கல்விப் படிப்புகளும் சோ்க்கப்பட்டுள்ளன.

ஐபி பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஒன்பது புதிய நிறுவனங்களை இணைத்துள்ளது. சில படிப்புகள் ஏற்கெனவே அதன் நரேலா வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் பல படிப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

மாணவா் சோ்க்கை பொது நுழைவுத் தோ்வுகள் மற்றும் ஜேஇஇ முதன்மை தோ்வு, நீட், சிஏடி, சிஎம்ஏடி, சிஎல்ஏடி, மற்றும் சியுஇடி போன்ற தேசிய அளவிலான தோ்வுகளின் கலவையின் மூலம் நடத்தப்படும். ஒரு முறை விண்ணப்பக் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூா்வ சிற்றேட்டைப் பாா்க்குமாறு விண்ணப்பதாரா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. Ś

X
Dinamani
www.dinamani.com