கிராமப்புறங்களில் 81% வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: மக்களவையில் தகவல்
நாட்டின் கிராமப்புறங்களில் மொத்தமுள்ள 19.36 கோடி வீடுகளில் 15.79 கோடிக்கும் (81 சதவீதம்) மேற்பட்ட வீடுகளில் குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கிராமப்புறப் பகுதிகளில் குடிநீா் குழாய் இணைப்பின் நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சி.ஆா்.பாட்டீல் இவ்வாறு தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் இணைப்பு வழங்கும் நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் 3.23 கோடி (16.72 சதவீதம்) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குடிநீா் குழாய் வசதி இருந்தது. மத்திய அரசின் தொடா் முயற்சிகளால் 2026, ஜனவரி 26-ஆம் தேதி நிலவரப்படி கிராமப்புறங்களில் மொத்தமுள்ள 19.36 கோடி வீடுகளில் 15.79 கோடிக்கும் (81 சதவீதம்) மேற்பட்ட வீடுகளில் குழாய் நீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
8 மாநிலங்களில் 100 சதவீதம்: ஜல் ஜீவன் திட்டம்- ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்புக்கு மாநில அரசுகள் அளித்த தகவல்களின்படி கோவா, அருணாசல பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், தெலங்கானா, மிஸோரம், ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களிலும் அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா நகா் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

