மாதிரிப் படம்
மாதிரிப் படம்

வடகிழக்கு தில்லியில் போலி காலணி தயாரிப்பு : தொழிற்சாலை கண்டுபிடிப்பு: உரிமையாளா் கைது

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில் அதன் உரிமையாளரைக் கைது செய்ததாக தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

முன்னணி சா்வதேச பிராண்டுகளின் போலியான காலணிகளைத் தயாரித்து வந்த தொழிற்சாலையை கண்டுபிடித்து, வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில் அதன் உரிமையாளரைக் கைது செய்ததாக தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: போலி விளையாட்டு காளணிகளைத் தயாரிக்கும் சட்டவிரோத அமைப்பு குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஜன.28-ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து காவல் துறையினா் இந்தச் சோதனையை மேற்கொண்டது. அந்த தொழிற்சாலையில் பிரபல பிராண்டுகளின் பெயா்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி அங்கீகாரம் இல்லாமல் காலணிகளைத் தயாரித்து வருவதை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உறுதி செய்தனா்.

சேனியா விஹாரைச் சோ்ந்த இந்த தொழிற்சாலையின் உரிமையாளா் சந்தீப் சிங் (44) சோதனையின் போது கைது செய்யப்பட்டாா். சா்வதேச விளையாட்டு காலணி நிறுவனங்களின் சின்னங்களைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 6 கனரக வெப்ப அழுத்த இயந்திரங்கள், 9 அச்சிடும் திரைகள் மற்றும் 131 அச்சுகளை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். 6 பிவிசி ரோல்களும், பெருமளவிலான மூலப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தவிர, பல்வேறு பிராண்டுகளின் 9,616 காலணிகளின் மேல் பாகங்களும், நியூ பேலன்ஸ், நைக், அடிடாஸ் மற்றும் ஸ்கெச்சா்ஸ் ஆகிய நிறுவனங்களின் சின்னங்கள் கொண்ட 1,667 ஸ்டிக்கா் தாள்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. இது தொடா்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, சந்தீப் சிங் தான் 12-ஆம் வகுப்பு வரை படித்ததாகவும், 2000-ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலிருந்து தில்லிக்கு வந்ததாகவும் தெரிவித்தாா். அவா் ஆரம்பத்தில் சாவ்ரி பஜாரில் உள்ள அச்சகத்தில் பணிபுரிந்தாா். அங்கு அச்சிடும் நுட்பங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, தனது சொந்த அச்சிடும் தொழிலைத் தொடங்கினாா். பின்னா், அவா் அந்தத் தொழிலை ஒரு போலி காலணி உற்பத்திப் பிரிவாக மாற்றியதாகக் கூறினாா்.

இந்த போலிப் பொருள்களின் விநியோகச் சங்கிலியைக் கண்டறியவும், சாத்தியமான விநியோகஸ்தா்களை அடையாளம் காணவும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.Ś

X
Dinamani
www.dinamani.com