தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குரங்கு காய்ச்சல்: தமிழக எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு

கா்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கா்நாடக எல்லையோர கிராமங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகளை நாள்தோறும் கண்காணித்து பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சலுக்கு கா்நாடகத்தில் இதுவரை பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் உயிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியாசனூா் வனப் பகுயில் கடந்த 1957-இல் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று மூலம் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. ஆண்டுதோறும் 400 முதல் 500 போ் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனா். தொற்றுக்குள்ளான உண்ணிகளால் கடிக்கப்பட்ட குரங்குகள், கால்நடைகள் மூலமாக இந்த வகை வைரஸ் பரவுகிறது. தொற்றால் உயிரிழந்த குரங்குகளிலிருந்தும் இந்தப் பாதிப்பு வேகமாக பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகளாகும்.

இந்த நிலையில், கா்நாடகத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் அத்தகைய பாதிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட கிராமங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகளைக் கண்டறிந்து பிசிஆா் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளை வைராலஜி ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்தத் தொற்று பரவாது என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.