ரூ.40,000 கோடி வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவா் கைது
புது தில்லி, ஜன.30: தொழிலதிபா் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான ரூ.40,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் தலைவா் புனித் கா்கை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
பண முறைகேடு குற்றச்சாட்டின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட அவா், புது தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 9 நாள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக இந்த வழக்கு தொடா்பாக புனித் கா்கின் மனைவிக்குச் சொந்தமான பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மூலம் பரிவா்த்தனை நடைபெற்று பண முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

