சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது இன்றுமுதல் கூடுதல் கலால் வரி!
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் கலால் வரி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) முதல் அமலுக்கு வர உள்ளது.
அதுபோல, பான் மசாலா பொருள்கள் மீதான புதிய சுகாதார செஸ் வரி விதிப்பும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
அதன் காரணமாக, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பான் மசாலா பொருள்களின் விலை பன்மடங்காக உயரும் என தெரிகிறது.
மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற ஒரே வரி விதிப்பு நடைமுறையை அறிமுகம் செய்தது. அது முதல், சிகரெட், புகையிலை, ஹுக்கா, ஜா்தா உள்ளிட்ட பிற புகையிலைப் பொருள்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜிஎஸ்டி விகித மாற்றம் மற்றும் கரோனா காலத்தில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுசெய்ய வாங்கப்பட்ட கடன் ஜனவரி 31-ஆம் தேதியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இழப்பீட்டு செஸ் நடைமுறையும் நிறுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பான் மசாலா பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி விகிதம் குறையாமல், உயா் அளவிலேயே இருப்பதை உறுதி செய்யும் வகையில், ‘மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025’, மற்றும் பான் மசாலா உற்பத்தி மீது புதிய செஸ் வரி விதிக்கும் ‘தேசியப் பாதுகாப்பு செஸ் மசோதா 2025’ ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அறிமுகம் செய்து நிறைவேற்றியது.
இன்று முதல் கூடுதல் வரி: இந்தப் புதிய திருத்தச் சட்டங்கள் இரண்டும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி, 65 மி.மீ. நீளம் கொண்ட ஃபில்டா் இல்லாத சிகரெட் மீது கூடுதலாக தலா ரூ. 2.05 வரி விதிக்கப்படும். இதே நீளம் கொண்ட ஃபில்டா் சிகரெட் மீது கூடுதலாக ரூ. 2.10 வரி விதிக்கப்படும்.
65 மி.மீ. முதல் 70 மி.மீ. நீளம் கொண்ட சிகரெட் மீது ரூ. 3.40 முதல் ரூ. 4 வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
70 மி.மீ. முதல் 75 மி.மீ. நீளம் கொண்ட சிகரெட் மீது ரூ. 5.40 கூடுதல் வரி விதிக்கப்படும்.
வழக்கத்துக்கு மாறான அல்லது தரமற்ற வடிவமைப்பு கொண்ட சிகரெட்டுகள் மீது அதிகபட்சமாக தலா ரூ. 8.50 கூடுதல் வரி விதிக்கப்படும். மிகவும் பிரபலமான சிகரெட் வகைகள் இந்த வரி வரம்பின் கீழ் வராது.
மெல்லக்கூடிய வகையிலான ஜா்தா, புகையிலை மீது 82 சதவீத கலால் வரியும், குட்கா மீது 91 சதவீத கலால் வரியும் விதிக்கப்பட உள்ளது.
மேலும், புதிய தேசியப் பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள பான் மசாலா உற்பத்தியாளா்கள் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் நிறுவனத்தை புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிறுவனங்கள், அதிலுள்ள அனைத்து பேக்கிங் இயந்திரங்களும் நன்கு தெரியக்கூடிய வகையில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதும், அதன் பதிவுகளை குறைந்தபட்சம் 24 மாதங்களுக்குப் பாதுகாத்து வைத்திருப்பதும் கட்டாயமாகும்.
நிறுவனத்திலுள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் கொள்ளளவையும் கலால் அதிகாரிகளிடம் இந்த நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். இந்த இயந்திரங்களின் உற்பத்தித் திறனுக்கேற்ப செஸ் வரி விதிக்கப்படும். அதாவது, 40 சதவீத ஜிஎஸ்டி-யை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு, பான் மசாலா மீதான மொத்த வரிச் சுமை தற்போதைய 88 சதவீத அளவிலேயே தக்கவைக்கப்படும்.
மேலும், ஓா் இயந்திரம் குறைந்தபட்சம் தொடா்ச்சியாக 15 நாள்கள் செயல்படாமல் இருந்தால், கலால் வரியில் தள்ளுபடி கோரவும் நிறுவனங்களுக்கு உரிமை உண்டு.
மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படும்: ‘சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீதான இந்த கலால் வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு திரும்ப பகிா்ந்தளிக்கப்படும். மேலும், தேசியப் பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ், பான் மசாலா நிறுவனங்கள் மீது அவற்றிலுள்ள இயந்திரங்களின் உற்பத்தித் திறனுக்கேற்ப இந்த செஸ் வரி விதிக்கப்படும். எனவே, உற்பத்தித் திறனுக்கேற்ப ஒவ்வொரு நிறுவனத்துக்கும் இந்த செஸ் வரி விதிப்பு மாறுபடும். இந்த செஸ் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணா்வு அல்லது பிற சுகாதாரத் திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படும்’ என்று இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

