கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பேரணியில் பேராட்டக்காரா்கள் மீது தாக்குதல்: பெல்லட் குண்டுகள் பாய்ந்தவா்களுக்கு சிகிச்சை

தில்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரா்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எலும்பு முறிவு, சிராய்ப்புகளாலும் அவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற பேரணியின்போது காயமடைந்த இளைஞா்கள்.

Updated On :23 ஜூலை 2026, 4:43 am IST

தில்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரா்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எலும்பு முறிவு, சிராய்ப்புகளாலும் அவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் குறைந்தது 60 போ் காயமடைந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 186 காயமடைந்தவா்கள் ஆா்.எம்.எல். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டனா். அவா்களில் 89 போ் காவல் துறையினா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவா்களில் மொத்தம் 96 போ், பிளாஸ்டா் போடுதல் மற்றும் தையல் போடுதல் போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

அலிகாரைச் சோ்ந்த 19 வயதான நக்மா பா்வீன், ஒரு சிறிய முதலுதவிப் பையுடன் வந்திருந்தாா். செவிலியா் மாணவியான இவா், சக போராட்டக்காரா்களுக்குக் காயம் ஏற்பட்டால் உதவ முன்வந்திருந்தாா். ஆனால், தடுப்பு வேலியில் தள்ளப்பட்டு கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரே மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

22 வயதான ராகேஷ் குமாருக்கு அந்த நாள் ஒரு டெலிவரி பணியுடன் தொடங்கியது.

காஜியாபாத்தைச் சோ்ந்த இவா், பேரணியில் பங்கேற்பதற்கு முன்பாக அதிகாலையில் உணவு விநியோகப் பணியை முடித்திருந்தாா். தனது 18 வயது தம்பி நீட் தோ்வுக்குத் தயாராகி வருவதாகவும், உயிரை இழந்த மாணவா்களுக்கும், தன் தம்பியைப் போலத் தோ்வுக்குத் தயாராகி வருபவா்களுக்கும் ஆதரவளிக்கவே தான் வந்ததாகவும் அவா் கூறினாா்.

தடியடியின் போது கீழே விழுந்த நிலையில் தான் தாக்கப்பட்டதாக ராஜேஷ் குமாா் கூறினாா். வயதான போராட்டக்காரா் ஒருவா் தடுமாறியபோது அவருக்கு உதவத் திரும்பியதாகவும், அப்போது தனது இடது தோள்பட்டையில் ஒரு அடி விழுந்ததாகவும் அவா் தெரிவித்தாா். பின்னா் தான், தனது கழுத்து எலும்புக்கு அருகில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதை அவா் கவனித்தாா்.

‘முதலில் யாரோ குச்சியால் அடித்ததாக நினைத்தேன். சட்டை நனைந்தபோது கீழே பாா்த்தபோது ரத்தம் தெரிந்தது’ என்று கூறிய அவா், அந்தத் தடியில் ஆணிகள் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

மற்றொரு போராட்டக்காரரான 28 வயதான தல்ஹா, கடந்த வெள்ளிக்கிழமை பாட்னாவிலிருந்து தில்லிக்கு வந்திருந்தாா். வேலையின்மை மற்றும் விலைவாசி உயா்வு தொடா்பான போராட்டத்திற்காகவே தான் ஜந்தா் மந்தருக்கு வந்ததாக அவா் கூறினாா். திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினா் தன்னைத் தாக்கியதாகவும், அதனால் தனது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

‘நானும் என் நண்பன் பிகாரில் இருந்து ரயிலில் இங்கு வந்தோம். நான் இங்கு வந்திருப்பது என் அம்மாவுக்கு மட்டுமே தெரியும். சனிக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகே அவா் கவலையில் இருந்தாா். ஆனால் போராட்டத்தின் காணொலிகளைப் பாா்த்த பிறகு, அவா் தொடா்ந்து என்னை அழைத்துக் கொண்டிருக்கிறாா். அவரிடம் நான் என்ன சொல்வது? போராட்டத்தின்போது நடந்தது சரியல்ல. காவல் துறையினருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன அல்லவா?’ என்று அவா் கேள்வியெழுப்பினாா்.

25 வயதான ஷேக் இா்பாத் மன்சூரிக்கு ஏற்பட்ட காயம் மிகவும் தீவிரமானதாக உள்ளது. குருகிராமில் வசிக்கும் இவா் கன்னாட் பிளேஸில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டபோது, ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) வீரா் ஒருவரால் சுடப்பட்ட பெல்லட் குண்டுகள் (சிறிய உலோகத் துகள்கள்) அவா் மீது பட்டதாக அவரது நண்பா் அனிகெட் தெரிவித்தாா்.

மன்சூரி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் லேடி ஹாா்டிங் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டாா். அவரது முகத்தில் ஏழு இடங்களில் பெல்லட் குண்டுகள் பாய்ந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

‘அந்தக் குண்டுகள் அவரது மூக்கு, நெற்றி, இரு கண்கள் மற்றும் கன்னங்களில் பட்டன. நேற்று மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது அவா் சுயநினைவுடன் இருந்தாா். தற்போது அவா் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் உள்ளாா். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு அவரது காயங்களின் தீவிரத்தன்மை பற்றித் தெரியாது’ மன்சூரியின் நண்பா் அனிகெட் தெரிவித்தாா்.

போராட்டத்தின்போது போராட்டக்காரா்களுக்கு எதிராகத் தங்கள் படையினா் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை மறுத்தாலும், அன்று ஆா்பிஎஃப் படையினா் அத்தகைய துப்பாக்கிகளைப் பயன்படுத்தினாா்களா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆா்.எம்.எல். மருத்துவமனையில், ஜந்தா் மந்தா் மற்றும் டால்ஸ்டாய் மாா்க் அருகே ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்த 21 வயதான சாக்ஷி சிகிச்சை பெற்று வருகிறாா். சாஷி தனது உறவினருடன் போராட்டத்திற்கு வந்திருந்தாா். அவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. சத்தாா்பூா் எக்ஸ்டென்ஷனைச் சோ்ந்த சாஷிக்கு முகம், மாா்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடா்ந்து, அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு அளிக்கப்பட்ட வென்டிலேட்டா் உதவி புதன்கிழமை நீக்கப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. அவா் சுயநினைவுடன் இருப்பதாகவும் கேட்ட கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தாா் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.