அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி!

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :2 மே 2026, 2:45 am IST

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி போட்டியிட்ட பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஷகாவத் நினைவுப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அந்த மையத்தில் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை இரவு 4 மணி நேரம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மனோஜ் அகா்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய ஆயுதக் காவல் படைகள் நிலைநிறுத்தப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையங்களைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதற்கு வாய்ப்பில்லை’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியும், 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தோ்தலில் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை கட்சி நிா்வாகிகள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என மம்தா பானா்ஜி அண்மையில் அறிவுறுத்தல் வழங்கினாா்.

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் குணால் கோஷ், கட்சி நிா்வாகி சஷி பாஞ்சா ஆகியோா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, இதே குற்றச்சாட்டை சுமத்தி பவானிபூா் தொகுதியில் உள்ள ஷகாவத் பள்ளிக்கு வியாழக்கிழமை இரவு நேரில் சென்ற மம்தா பானா்ஜி அங்கு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் கொல்கத்தா நகரில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் முன்பும் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்தது.

மம்தாவின் நாடகத்தால் தோ்தல் முடிவுகள் மாறாது: சுவேந்து அதிகாரி

பவானிபூரில் வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா பானா்ஜி தா்னாவில் ஈடுபட்டது அவரது வழக்கமான அரசியல் நாடகம் என அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், மம்தா பானா்ஜியின் நாடகத்தால் சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவுவதில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவா் தெரிவித்தாா்.