மகாராஷ்டிரத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மராத்தி மொழிப்பாடத்தில் மட்டும் 80,803 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இந்தாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், மராத்தியை முதல் மொழியாக தேர்ந்தெடுத்து தேர்வெழுதிய 10,87,699 மாணவர்களில் 80,803 பேர் மராத்தி மொழிப் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர். இது, மொத்த எண்ணிக்கையில் 7 சதவீதமாகும்.
மேலும், மராத்தி மொழிப் பாடத்தை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழிப்பாடமாக எடுத்துப்படித்த 4,13,917 பேரில் 13,741 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
இது மராத்தி மொழியின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்வில் இடம்பெற்ற 35 பாடங்களில், 12 பாடங்களில் 100% தேர்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மராத்தி பாடத்தில் தோல்வியடைந்த எண்ணிக்கை அதிகரித்ததற்கு எழுத்துப்பிழை, புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் மராத்திய இலக்கியம் ஆகியவற்றை வாசிப்பது குறைந்தது போன்றவையே காரணம் என்று கல்வியியல் மற்றும் மொழியியலாளர்கள் கூறுகின்றனர்.
”இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண விரும்பினால் மாணவர்களிடையே மராத்தி மொழியின் மீது அதிக ஆர்வத்தை வளர்த்து, கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் பாடப்புத்தக வாசிப்பு மற்றும் மொழி சார்ந்த பயிற்சிகளையும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு மொழிப் பாடத்தைப் படிக்கும் விதமாக 12 ஆம் வகுப்பு வரை மராத்தியைக் கட்டாயமாக்க மாநில அரசு தனது கொள்கைளில் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்று கல்வியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மகாரஷ்டிரத்தில் மராத்தி பேசாத ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு முடிவுகள் இவ்வாறு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்த மாணவர்களின் மொத்த சதவீதம் 92.09%. மொத்தமாக 15,55,026 மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்து, அதில் 15,42,472 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 14,20,486 பேர் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், குஜராத்தியைத் தங்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுத்த 302 மாணவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று, 100% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர்.
Summary
Class 10 Public Exams: 80,803 Students Fail in Marathi Language Subject.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









