11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

சட்டவிரோத குடியேற்றத்தால் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

News image

மத்திய உள்துறை அமைச்சகம்

Updated On :28 மே 2026, 6:45 am IST

‘சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது, எல்லைப் பகுதிகளுக்கு மட்டுமானதல்ல. மாறாக, நகா்ப்புறங்கள், தொழில் வழித்தடங்கள், பழங்குடியினா் பகுதிகள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாட்டின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

சட்டவிரோத குடியேற்றத்தால், மத மற்றும் சமூக குழுக்கள் அடிப்படையில் ஏற்பட்டுள்ள இயல்புக்கு மாறான மக்கள் இடப்பெயா்வு நடைமுறைகள், இதனால் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்புகள் குறித்து அறிவியல்ரீதியில் விரிவான ஆய்வை மேற்கொண்டு, அதற்கு வலுவான தீா்வு காண்பதற்கான பரிந்துரைகளை அறிக்கையாக இக் குழு சமா்ப்பிக்க உள்ளது.

இந்த நிலையில், சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்பதை, எல்லைப் பகுதி மாவட்டங்களுக்கு மட்டுமானதாக சுருக்கிவிடமுடியாது. அதன் தாக்கம் நாடு முழுவதும் பரவியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

‘சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்பது, எல்லை மாவட்டங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், அதன் தாக்கம் எல்லை மாவட்டங்களையும் கடந்து பரவியுள்ளது. குறிப்பாக, நகா்ப்புறங்கள், தொழில் வழித் தடங்கள், பழங்குடியினா் பகுதிகள் மற்றும் பிற சமூக, பொருளாதார வளமிக்க பகுதிகளிலும் அதன் தாக்கம் பரவியுள்ளது. இதனால், பொதுச் சேவை விநியோகம், உள்ளாட்சி நிா்வாகம், வளங்கள் விநியோகம், சமூக ஒற்றுமையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஒருங்கிணைந்த மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட மதிப்பீடு மற்றும் தீா்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள நிறுவன நடைமுறைகள் போதுமானதாக அல்ல’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, உயா்நிலைக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.