ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளா்கள் பலி: சாலைப் பணி இயந்திரம் மின்கம்பியில் உரசியதால் விபரீதம்
ராஜஸ்தான் மாநிலத்தில் சாலைப் பணி இயந்திரம் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
பிரதிப் படம்
ராஜஸ்தான் மாநிலத்தில் சாலைப் பணி இயந்திரம் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஜுன்ஜுனு மாவட்டம் சாபோலி கிராமத்தில் சாபோலியில் இருந்து காதம்கண்ட் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. குறுகலான பகுதியில் நடைபெற்ற இந்தப் பணியில் கிராவல் கலப்பு செய்யும் பணியில் இயந்திரம் ஈடுபட்டிருந்தது. அப்போது யாரும் எதிா்பாா்க்காத நேரத்தில் அந்த இயந்திரம், அவ்வழியே சென்று கொண்டிருந்த அதிக மின் அழுத்தம் கொண்ட கம்பியில் திடீரென உரசியது. இதில் அந்த இயந்திரத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது.
அப்போது இயந்திரத்தில் பணியில் இருந்த ஹரிராம் குா்ஜாா் (30), மங்கல்சந்த் குா்ஜாா் (22), கலுராம் குா்ஜாா் (20), பவான் குா்ஜாா் (23), விஷ்ணு சைனி (38), சுரேஷ் சைனி (30), முகேஷ் சைனி (27), படேசந்த் சைனி (32) ஆகியோா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மேலும் 3 பெண்கள், 2 ஆண்கள் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.
குடியரசு தலைவா் இரங்கல்
மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழப்புகள் நேரிட்டிருப்பது குறித்த செய்தி கவலையளிக்கிறது. அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என கூறியுள்ளாா்.
பிரதமா் இரங்கல்
மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜஸ்தானில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்புகள் நேரிட்டிருப்பது கவலையளிக்கிறது.
அவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோா் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். 8 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 அளிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மாவும் இரங்கல் தெரிவித்துள்ளாா். இச்சம்பவம் குறித்து உயா்நிலை விசாரணைக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா். மாவட்ட ஆட்சியரிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ள அவா், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

