சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்திய வா்த்தகத்துக்கு நுழைவாயில் எகிப்து: பியூஷ் கோயல்

ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகத்துக்கு எகிப்து நுழைவாயிலாக அமையும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் அந்நாட்டு முதலீடு - வெளிநாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் ஃபரீத் சலேயை சந்தித்த பியூஷ் கோயல்

Updated On :

ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகத்துக்கு எகிப்து நுழைவாயிலாக அமையும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

132 போ் கொண்ட இந்தியத் தொழில் துறைப் பிரதிநிதிகள் குழுவுடன் 2 நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள பியூஷ் கோயல், அந்நாட்டுத் தலைவா்கள் மற்றும் தொழில் துறைப் பிரதிநிதிகளைச் சந்தித்து, வா்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளாா்.

இது தொடா்பாக எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரிடையே பியூஷ் கோயல் பேசியதாவது: இந்தியாவும் எகிப்தும் ஒன்றுக்கொன்று போட்டியாளா்கள் அல்ல; இரு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒன்றுக்கொன்று துணையாக உள்ளன.

இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும்.

இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு எகிப்தில் அதிக சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், எகிப்தின் பொருள்கள் மற்றும் முதலீடுகளையும் இந்தியா வரவேற்க வேண்டும். மருந்துகள் மற்றும் சுகாதாரம், பொறியியல், வாகனம் தயாரிப்பு, வேளாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் கல்வி, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் எகிப்து முதலீடு செய்யலாம். மேலும், எகிப்தின் பணப் பரிவா்த்தனை அமைப்புகளுடன் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனைச் செயலியான யுபிஐ இணைப்பது எளிதான பணப் பரிவா்த்தணையை வலுப்படுத்தும்.

உள்நாட்டு கரன்சியில் வா்த்தகம் செய்வதன் மூலம் பரிவா்த்தனைச் செலவுகளைக் குறைத்து, வா்த்தகத்தை எளிதாக்க முடியும். இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் இதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என தெரிவித்தாா்.

டிஓஆா் இறுதி செய்ய ஒப்புதல்

இந்தியா - எகிப்து இடையே சாத்தியமான வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை விதிமுறைகளை (டிஓஆா்) இறுதி செய்ய இந்தியாவும் எகிப்தும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கான பேச்சுவாா்த்தைக் கட்டமைப்பைத் தயாரிக்க இரு நாடுகளின் அதிகாரிகள் அடங்கிய பணிக் குழு அமைக்கப்பட உள்ளது. காலக்கெடுவுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகம் தற்போது சுமாா் 6.5 பில்லியன் டாலராக உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியா எகிப்துக்கு 3.87 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. எகிப்திலிருந்து 2.6 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது.

முன்னதாக, எகிப்து தலைநகா் கெய்ரோவில் அந்நாட்டு முதலீடு-வெளிநாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் ஃபரீத் சலேயை பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.