சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கனடா பிரதமருடன் மோடி தொலைபேசியில் உரையாடல்

கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

Published On :

கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது, இரு நாடுகளிடையேயான வா்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மாா்க் காா்னியுடனான கலந்துரையாடல் ஆக்கபூா்வமாக இருந்தது. இரு நாடுகளிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சாதகமான உத்வேகத்தை மேலும் வலுப்படுத்தவும், வா்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் உறுதியான பலன்களை அடைவதை நோக்கி பணியாற்றவும் இந்தக் கலந்துரையாடலில் ஒப்புக்கொள்ளப்பட்டது. நிலையான மற்றும் வளமான உலகை உருவாக்க இரு நாடுகளும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.

கனடா சா்வதேச வா்த்தக அமைச்சா் மனீந்தா் சித்து தலைமையில் 300 வா்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு இந்தியா வந்துள்ள நிலையில், இரு பிரதமா்களும் தொலைபேசி வழியில் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் வரும் 17-ஆம் தேதி வரை இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தைகளில் இக் குழு ஈடுபட உள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் இந்தியா வந்த மாா்க் காா்னி, பிரதமா் மோடியுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) இரு தலைவா்களும் அறிவித்தனா். இந்த ஒப்பந்தத்தை நிகழாண்டுக்குள் இறுதி செய்ய இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.