மத்திய அரசு - லடாக் தலைவா்கள் பேச்சில் தீா்வு எட்டப்படவில்லை: 22-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை
மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் லடாக் தலைவா்கள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை.

லடாக்
மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் லடாக் தலைவா்கள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை. இதையடுத்து தில்லியில் வரும் 22-ஆம் தேதி மீண்டும் இருதரப்பினரும் சந்தித்துப் பேசவுள்ளனா்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, தனி சட்டம், ஜனநாயக உரிமைகள், அரசமைப்புச் சட்ட ரீதியில் பாதுகாப்புகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி லே தலைமை அமைப்பு (எல்ஏபி), காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) சாா்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது அவா்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தி தீா்வு காணப்படும் என்று அரசு ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, லடாக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைக் குழு மற்றும் எல்ஏபி, கேடிஏ பிரதிநிதிகள் இடையே வெள்ளிக்கிழமை சுமாா் 3 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் மக்களவை எம்.பி. ஹாஜி ஹனீபா ஜான், சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் இரு தரப்பும் தனித்தனியாக திட்டங்களை முன்வைத்தன. மத்திய அரசு முன்வைத்த வரைவுத் திட்டம் மீது லடாக்கில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.
எனவே, இரு தரப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்க தில்லியில் வரும் 22-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

