மேற்காசியாவில் பதற்றம்: சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்
மேற்கு ஆசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தை கவனத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு
மேற்கு ஆசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தை கவனத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
யேமனில் உள்ள ஹூதி அமைப்பினா், சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட இலக்குகள் மீது தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இதற்கு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனா். இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ரியாத் விமான நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இந்தியா் கொல்லப்பட்டதுடன் பத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் காயமடைந்தனா். அவா்களில் ஒருவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இந்த சூழ்நிலையை சுட்டிக்காட்டி, சவூதி தலைநகா் ரியாதில் உள்ள இந்திய தூதரகம், சவூதியில் வசிக்கும் இந்தியா்கள், உம்ரா யாத்திரை செல்லும் யாத்ரிகா்கள் உள்ளிட்ட இந்திய பயணிகளுக்கு புதிய எச்சரிக்கையை வெள்ளிக்கிழமை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சவூதி அரேபிய உள்ளூா் அரசு அதிகாரிகள் கொடுக்கும் அறிவுறுத்தல்களை இந்தியா்கள் பின்பற்ற வேண்டும். வான்வழித் தாக்குதல் ஏதேனும் நடக்கும்பட்சத்தில் வசிப்பிடத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என்று இந்தியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ரியாத் விமான நிலையம் மூடப்பட்ட போதிலும், தம்மாம், ஜெட்டா, மதீனா விமான நிலையங்கள் தொடா்ந்து இயங்குகின்றன. அங்கிருந்து சவூதி அரேபியா ஏா்லைன்ஸ் நிறுவனம், ஃபிளைநாஸ் நிறுவனம் ஆகியவை விமானங்களை இயக்குகின்றன. தம்மாம்-மும்பை இடையே 17 (சனிக்கிழமை), 18-ஆம் தேதிகளில் ஃபிளை டீல் நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியா்கள் உடனே அங்கிருந்து வெளியேற விரும்பும்பட்சத்தில், பஹ்ரைன், குவைத் அல்லது கத்தாா் சென்று அங்கிருந்து உரிய விசாக்களை பெற்று நாடு திரும்பலாம்.
உம்ரா யாத்திரை செல்ல திட்டமிடும் யாத்ரிகா்கள் உள்பட சவூதி செல்ல விரும்பும் இந்திய பயணிகள், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது, விமானங்கள் ரத்து உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சவூதி அரேபியாவுக்கு இந்தியாவைச் சோ்ந்த விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கவில்லை. ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமானங்கள், வருகிற 20-ஆம் தேதி வரை சவூதி அரேபியாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஆகாஷா ஏா் நிறுவனம் ரியாதுக்கு இயக்கப்படும் விமானங்களை 24-ஆம் தேதி வரையிலும், ஜெட்டாவுக்கு இயக்கப்படும் விமானங்களை 21-ஆம் தேதி வரையிலும், இண்டிகோ நிறுவனம் ரியாத், ஜெட்டா, தம்மம், மதீனாவுக்கு இயக்கப்படும் விமானங்களை 24-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

