சொன்னதைச் செய்யும் மருந்து சுமப்பான்கள்!

ஒரு பிரச்னையை இதுதான் என்று சொல்வது ரொம்ப எளிது. மருந்துப் பொருளுக்கு, தேவையுள்ள ஆணி, தேவையில்லாத ஆணி என்று எப்படி வேறுபாடு காட்டுவது.


                   
உங்கள் வீட்டுக்கு நான் ஒரு கடிதம் அல்லது ஒரு பொருளை அனுப்ப வேண்டும். புத்தி உள்ள ஆளாயிருந்தால் என்ன செய்ய வேண்டும். உங்கள் பேரையும் வீட்டு முகவரியையும் எழுதி அனுப்ப வேண்டும். அதற்குப் பதில், அட்ரஸ் இல்லாமல், போஸ்ட்மேனுக்கு காசு கொடுத்து கரெக்ட் செய்து வீடு வீடாகப் போய் நோட்டீஸ்போல் போட்டால் நன்றாகவா இருக்கும். ஏதோ, வெறும் நலம் நலமறிய ஆவல் கடிதமென்றால் தொலைகிறது. கண்ணே கனியமுதே வகையறா என்றால் ஊருக்கே தமுக்கடிப்பதுபோல் ஆகாதா? 

காதல் கடிதமெல்லாம் வேண்டாம். ஆந்த்ராக்ஸ் பவுடர் வைத்து அனுப்பி ஒரு ஆளை க்ளோஸ் செய்யப் பார்க்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் பொடி வைத்து அனுப்பினால் எவ்வளவு பொடி தேவைப்படும். அப்போது அட்ரஸ் தெரியாமல் அனுப்புவது என்பது எவ்வளவு சிக்குபிடித்த வேலை என்று தெரிகிறதா? அது ஒரு நேரம், பொருள் விரயமாகிற ஒரு திறனற்ற வேலை.

ஆனால் பாருங்கள், நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டிய மருந்துகளை இதே பாணியில்தான் அனுப்புகிறோம். தலை வலிக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் மாட்டு வண்டிச் சக்கரத்துக்கு க்ரீஸ் தடவுவதுபோல் விரல் நிறைய எடுத்து தலைவலி களிம்பை தேய்க்கிறோம். ஆனாலும் ஒரு மாத்திரை போட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. சரியென்று ஒரு மாத்திரையை முழுங்குகிறோம். அந்த மாத்திரை நேரே இரைப்பைக்குப் போகிறது. இரைப்பையில் நடத்தப்படுகிற அமிலத் தாக்குதல்களையெல்லாம் தாண்டி குடல் பகுதியில் போய் விழுகிறது. குடலில் இருக்கிற வில்லிகள் (ஆம், விரல் வடிவான, உணவுப் பொருள்களில் இருந்து சத்துப்பொருட்களை உறிஞ்சும் அமைப்புக்கு வில்லி (villi) என்றுதான் பெயர். முரண்) வழியாக ரத்த ஓட்டத்தைக் கடந்து, நேரே வலியைக் கடத்தும் நரம்புகளை அமுக்கிவைக்கும். 

வாயில் போடப்படும் மருந்து நேராக குடல் பகுதிக்குப் போவதில்லை. இரைப்பையில் இருந்து, உள் பகுதியில் இருக்கும் எல்லா உறுப்புக்கும் ஒரு சுற்றுலா போகும். எங்கு பிரச்னை என்று அதற்குத் தெரியாதல்லவா. ஆக, உடலை உள்பக்கமாகச் சுற்றிச் சுற்றி வந்து, கடைசியில் எங்கு பிரச்னை என்பதைக் கண்டறிந்து அங்கு தன் வேலையைக் காண்பிக்கும். மீதி மருந்து, கிட்னி என்னும் செக்போஸ்டை கடக்கும்போது, ‘வேலை முடிஞ்சுடுச்சுல்ல, உடலை விட்டு வெளியே கிளம்பு’ என சிறுநீர் வழியே வெளியேறிவிடும். இந்த முறையில், உடலுக்குத் தேவையானதைவிட அதிகமான மருந்து தேவைப்படும்; அப்படித்தான் நாமும் எடுத்துக்கொள்கிறோம்.  இதனால், கிட்னிக்கு கூடுதல் வேலை. ஒரு சாதாரண தலைவலி மாத்திரை என்றால் பரவாயில்லை.

ஆனால், கீமோதெரபி எனப்படும் புற்றுநோய்ச் சிகிச்சையில், புற்றுநோய் செல்களைக் கொல்லும் மருந்துகளை உடலுக்குள் செலுத்துவார்கள்.  அந்த மருந்துகளுக்கு நல்ல செல் எது, புற்றுநோய் செல் எது என்றெல்லாம் வித்தியாசம் தெரியாது. ‘வார்டன்னா அடிப்போம்’ என்று இறங்கி அடிக்கும். அந்த அடியில், நல்ல ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படும். அத்துடன், சிறுநீரகம், கல்லீரல் போன்ற கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள். உபரியாக உள்ள மருந்தை உடலில் இருந்து வெளியேற்ற படாத பாடு படும். 

அப்படிப்பட்ட சமயங்களில், இந்த மருந்துகளிடம் ‘நேரா கழுத்த தாண்டி சோத்தாங்கை பக்கமா போனேன்னு வை, அங்க ஒரு முட்டி இருக்கும். அந்த முட்டிலதான் வலி. போய்ப் பார்த்து வேலையை முடி’ என்று அனுப்ப முடிந்தால் எப்படி இருக்கும். நேரம் மிச்சம்; அந்தப் பகுதிக்கு மட்டும் தேவையான மருந்து அனுப்பப்பட்டால் போதும். உடலுக்கு வேலையும் மிச்சம். ஆனால், இந்த மருந்துகள் கூலிப்படை மாதிரி எல்லாரையும் அடிப்பேன் என்று இறங்குவதால், நாம் ஆள்காட்டி ஒன்றோடு அனுப்ப வேண்டும். அந்த ஆள்காட்டிக்குதான் மருந்து சுமப்பான் (drug carrier) என்று பெயர். மருந்தை தேவையான இடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் முறைக்கு drug delivery என்று பெயர். இன்றைய தேதிக்கு, மருத்துவ ஆராய்ச்சியின் மையப் பகுதியாக இதுவாகத்தான் இருக்கிறது.

ஒரு பிரச்னையை இதுதான் என்று சொல்வது ரொம்ப எளிது. மருந்துப் பொருளுக்கு, தேவையுள்ள ஆணி, தேவையில்லாத ஆணி என்று எப்படி வேறுபாடு காட்டுவது. ஆனால், ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொருவிதமாக உடல் எதிர்வினை ஆற்றுவதால், செயல்முறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்ப்போம். வலி இருக்கும் இடத்தில் மட்டும் சில குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் சுரக்கும். அப்போது அந்த வேதிப்பொருளின் பண்புகளை, வடிவத்தை, அமிலத்தன்மையை, வினை புரியும் திறனை ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் ஒரு பொருளை கணினியில் வடிவமைக்க வேண்டும். 

அந்தப் பொருள், வலி இருக்கும் இடத்தில் உள்ள வேதிப்பொருளுடன் சேர்ந்து, தான் கொண்டுவந்த மருந்தை அந்த இடத்தில் வெளிவிட வேண்டும். மீதி இடங்களில், அவ்வை சண்முகி படத்தில் மணிவண்ணன் சொல்வதைப்போல், ‘அத்த நான் பாண்டியன் கைலதான் சொல்லுவேன்’ என்று அடம்பிடிக்க வேண்டும். நாம் உடன் அனுப்பும் அந்த மருந்துச் சுமப்பான், மருந்தின் இயல்பான செயல்முறையில் குறுக்கிடக் கூடாது. வேறு பக்க அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது. மருந்து கண்டுபிடித்தலைவிட மருந்து சுமப்பான்களைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம். 

இதற்கு, நேனோ தொழில்நுட்பத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். அவை அளவில் சிறியதாக, வேண்டிய வடிவில் செய்யக்கூடியதாக இருக்கிறது. சொன்ன பேச்சு கேட்கிறது. பிரச்னை இருக்கும் இடத்தில் அந்த வேதிப்பொருளோடு பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிற மாதிரி பரப்புகளை நேனோ அளவுள்ள பொருட்களில் வடிவமைக்க முடிகிறது. நேனோவுக்கு அடுத்ததாக, மென்படலங்கள் எனப்படும் microfilms, இந்த மருந்து சுமக்கும் துறையில் நம்பிக்கை அளிக்கிறது. 

புற்றுநோய் செல்கள் வெளியிடும் வேதிப்பொருட்களை, சமிக்ஞைகளைப் புரிந்துகொண்டு, அங்கு மட்டும் மருந்தை வெளியிட்டு அவற்றைக் கொல்லும் முறையை நோக்கி நவீன மருத்துவம் நகர்ந்துகொண்டிருக்கிறது. வெகுவிரைவில், எல்லோராலும் பெறமுடிகிற விலையில் இதனை எதிர்ப்பார்க்கலாம். இது மருத்துவ உலகில் பெரிய புரட்சியாகவும், மைல்கல்லாகவும் இருக்கும். 

நல்ல வேளை, உடம்புக்குள் ‘டேக் டைவர்சன்; ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்று போர்டு வைக்க யாரும் இல்லை. இருந்தால், அவற்றின் பாடும் திண்டாட்டமாகப் போயிருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com