எங்க, கொஞ்சம் ஊது..

அந்தக் கரைசல், காற்றில் சாராயம் இருந்தால் அதோடு வினைபுரிந்து பச்சை நிறமாக மாறும். அந்தப் பச்சை நிறத்தின் அடர்த்தியை வைத்து உடலில் எவ்வளவு சாராயம் இருக்கிறதென்று கண்டுபிடித்துவிடலாம்.

நகரங்களில், சனிக்கிழமை இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லும் எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும். போக்குவரத்துப் போலீஸாரால் வழிமறிக்கப்பட்டு சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்கப்படும். சத்தமாகவே பதில் சொன்னாலும், அவர் கொஞ்சம் நெருங்கிவந்து காது கொடுத்துக் கேட்பார். அவர் காது கொடுப்பதில்லை. கொஞ்சம் மூக்கு கொடுத்து நாம் “தெளிவாக” இருக்கிறோமா என்று பார்க்கிறார். தீவிரமென்றால், எங்க ஊது என்று மூச்சுக்காற்றை வைத்து உ.பா. (உற்சாக பானம்) அருந்தியிருக்கிறோமா என்று சோதிப்பார்.

உலகெங்கும் நடக்கும் வாகன விபத்துகளில் பெரும்பாலானவை, குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலேயே நிகழ்கிறது. உடலுக்குள் செல்லும் சாராயம், உடனேயே ஜீரணிக்கப்படுவதில்லை. மாறாக, “இவன் ஏன் இப்போ இங்க வந்தான்” என்பதுபோல, வேண்டா வெறுப்பாக, அழையா விருந்தாளியாக நடத்தப்படும். ரத்த ஓட்டத்தில் கலந்துவிட்ட சாராயத்தை, போய்த்தொலை சனியனே என்று ஈரல் சுக்கல்சுக்கலாக உடைத்து சிறுநீரகம் வழியாக வெளியேற்றும். ஆனால், இந்த நடவடிக்கைக்கு உடலில் உள்ள பெரும்பான்மையான நீர்ச் சத்தை போர் போட்டு உறிஞ்சுவதுபோல், உறிஞ்சி எடுத்துவிடும். இப்படி வெளியேறும் சாராயம், ரத்த ஓட்டத்தில் கலந்து நுரையீரலுக்குப் போகும். அங்கு, மூச்சுக்காற்றில் கலந்துவிடும். அது, ஊதுவதில் தெரிந்துவிடும்.

ஆனால், ஒரு போலீஸ் அதிகாரி, சாலையில் வண்டியில் போகிற அனைவரையும் அழைத்து ஊதச் சொல்லி முகர்ந்து பார்ப்பது நன்றாக இருக்காதே. அதனாலதான், சட்டென்று மூக்கைத் தொடச் சொல்லுதல், நேர்க்கோட்டில் நடக்கச் சொல்லுதல்னு செய்யச் சொல்லுவாங்க.

ரத்தத்தில் கலந்து மூளைக்குப் போகும் சாராயம், நியூரான்களின் ராணுவக் கட்டுப்பாட்டை குலைத்து குழப்பி விட்டுவிடும். இதனால், தசைகளைச் சரிவர கட்டுக்கோப்பாக இயக்க முடியாது. மேற்சொன்னதை, அதாவது மூக்கைத் தொடச் சொன்னால், கை கன்னத்துக்குப் போகும். நேர்க்கோட்டில் நடக்கச் சொன்னால், கால் பின்னும். ஆனால், இந்த முறைகள் உடலில் சாராயம் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவுமே தவிர, நிலைமை எவ்வளவு சிக்கலானது என்று சொல்ல உதவாது. அங்குதான், Breath Analyzer எனப்படும் மூச்சுக்காற்றில் இருக்கும் சாராயத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பயன்படுகின்றன. ஒரு ஸ்ட்ரா போன்ற கருவியைப் பொறுத்தி அதில் ஊதச் சொன்னால், உள்ளே போகிற காற்றில் இருக்கும் சாராயத்தின் அளவைப் பொறுத்து, எவ்வளவு குடித்திருக்கிறான் என்று கண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக் கருவிகள் மூன்று விதமாக இருக்கின்றன. ஆரம்பத்தில், சாராயத்தின் வேதிவினைகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருவியை உருவாக்கினார்கள். அந்தக் கருவிக்குள் சில வேதிப்பொருட்கள் இருக்கும். என்னவென்று தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படியுங்கள். மற்றவர்கள், அடுத்த பத்திக்குப் போய்விடுங்கள். அந்தக் கருவிக்குள், ஒரு குப்பியில் பொட்டாசியம் டைக்ரோமேட் (Potassium dichromate), உடன் கொஞ்சம் கந்தக அமிலம் வைத்திருப்பார்கள்.

நீங்கள் ஊதுகிற காற் நேராக அந்தக் கரைசல் வழியாகப் போகும். குத்துமதிப்பாக ஃபேன்டா (அதிதீவிர சுதேசியர்கள், ஃபேன்டா வந்தேறி பானம், அது வேணாம் என்றால், டொரீனோ என்று வைத்துகொள்ளுங்கள்) நிறத்தில் இருக்கும் அந்தக் கரைசல், காற்றில் சாராயம் இருந்தால் அதோடு வினைபுரிந்து பச்சை நிறமாக மாறும். அந்தப் பச்சை நிறத்தின் அடர்த்தியை வைத்து உடலில் எவ்வளவு சாராயம் இருக்கிறதென்று கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இதற்கு கொஞ்சம் நேரமும், ரசாயனப் பொருள்களும் செலவாகும் முறை. அதற்கு அடுத்து வந்த கருவி, சாராயத்தின் ரசாயனப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.

எல்லா மூலக்கூறுகளின் ரசாயனப் பிணைப்புகளும் ஒரு ஸ்பிரிங்கைப்போல் அசைந்துகொண்டே இருக்கும். அந்த அசைவின் அதிர்வெண், நம் கண்களுக்குப் புலப்படாத அகச்சிவப்புக் கதிரின் அதிர்வெண்ணோடு ஒத்துப்போகும். ஒவ்வொரு பிணைப்புக்கும் ஒரு அதிர்வெண் உண்டு. அப்படியென்றால், அந்த மூலக்கூறு மீது அகச்சிவப்புக் கதிர்களைச் செலுத்தினால், “அட இது நம்ம வகையறா” என்று அந்த மூலக்கூறு சில அதிர்வெண்களை விழுங்கிவிடும். எவ்வளவு விழுங்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து, எவ்வளவு சாராயம் எனக் கண்டுபிடிக்கலாம். கருவிக்குள்  காற்று ஊத ஒரு இடம், ஒரு பக்கம் அகச்சிவப்புக் கதிர்களை உமிழும் ஒரு விளக்கு, மற்றொரு முனையில் அகச்சிவப்புக் கதிர் எவ்வளவு விழுங்கப்பட்டிருக்கிறது என்று கணிக்கக்கூடிய ஒரு அமைப்பு. கச்சிதமான, அதேசமயம் துல்லியமான கருவி. கரைசல்கள் எல்லாம் தேவையில்லை என்பதால் சல்லிசாகவும் முடிந்துவிடும்.

மூன்றாவது நவீன வகை, மீண்டும் அதன் ரசாயனப் பண்புக்குதான் வருகிறது. காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனோடு சாராயம் வினைபுரியும்போது, எலக்ட்ரான் பரிமாற்றத்தால் ஒரு நுண்ணிய மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதை அளப்பதன் மூலம், மூச்சுக்காற்றில் இருக்கும் சாராயத்தின் அளவைச் சொல்லிவிடலாம். காற்று ஊத ஒரு குழாய். சாராயத்தை ஆக்ஸிஜனுடன் வினைபுரிய வைக்க சில வினையூக்கிகள் (catalysts). மின்சாரத்தை அளக்கிற ஒரு அமைப்பு. வெளிநாடுகளில் இது வந்துவிட்டாலும், இந்தியாவில் நாம் இன்னும் இரண்டாவது நிலையிலேயேதான் இருக்கிறோம். கூடிய சீக்கிரம் இந்த நவீனக் கருவியே வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். இம்மாதிரி கருவிகள், மனிதர்கள் வாகனம் செலுத்தும் வரை தேவைப்படும். தானோட்டிக் கார்கள் பரவலாக வந்தபின்னால், இதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கம்ப்யூட்டர்கள் ‘மானிட்டர்’ அடிப்பதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com