Enable Javscript for better performance
காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும் - Dinamani

சுடச்சுட

  காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்

  By அரவிந்தன் நீலகண்டன்  |   Published on : 06th April 2015 10:54 AM  |   அ+அ அ-   |    |  

   

  கதீஷ் சந்திர போஸ் என்ற உடனேயே நினைவுக்கு வர வேண்டிய, ஆனால் இந்தியர்கள் மறந்துவிட்ட ஒரு முக்கியமான பெயர் பேட்ரிக் ஹெடிஸ் (Patrick Geddes). ஏனெனில், ஜகதீஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர்தான். இதுதான் போஸின் ‘அதிகாரபூர்வமான’ வாழ்க்கை வரலாறு என்றுகூட சொல்லலாம்.

  சகோதரி நிவேதிதாவின் ‘இந்திய வாழ்வின் வலைப்பின்னல்’ (The web of Indian life) எனும் நூலில் இருவருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஒருவர், இந்திய பொருளாதார அறிஞர் ரமேஷ் சந்திர தத். மற்றொருவர், பேட்ரிக் ஹெடிஸ். பேட்ரிக் ஹெடிஸ், பலதுறை மேதை. Polymath என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தாவரவியலாளர், கல்வியியலாளர், பரிணாம கோட்பாடுகளை முன்வைத்தவர், நகரங்களை திட்டமிடுவதில் வல்லவர். குறிப்பாக, நகரங்களை வடிவமைப்பதில் அவர் உயிரியல் கோட்பாடுகளை கையாளுவார். நகரத்துக்கும் அதில் வசிக்கும் மக்களுக்குமான உறவு உயிரியல் உறவு என்பது அவரது கருத்து.

  patrick-geddes.jpg 

  இந்த மாதிரி ஒரு கோட்பாடு நம்மிடம் உண்டு. பரிபாடலில். மதுரையை வர்ணிக்கும் வரிகள் இவை:

  மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
  பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
  இதழகத் தனைய தெருவம் இதழகத்
  தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
  தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

  தாமரை மலரின் இதழ்களின் அமைப்பை போன்ற தெருக்கள் என்பதுடன் மக்கள், மலரின் மகரந்தத் தூள்கள்போல என ஒருவித உயிர் உறவைக் காட்டும் இந்தப் பாடல் வரிகளை கவிஞனின் கற்பனை என்று மட்டுமே எடுத்துக்கொள்ளலாமா?

  பேட்ரிக் ஹெடிஸ், தென்னிந்தியாவில் உள்ள கோவில் நகரங்களையும், அந்த நகரங்களின் பழமையான அமைப்பையும் ஆழ்ந்து படித்தார். ஒவ்வொரு கோவில் நகரத்துக்கும் சென்றார். மதுரை, காஞ்சிபுரம் எல்லாம் சுற்றிப் பார்த்தார். தெருக்களின் அமைப்பு முதல் சாக்கடைகள் எங்கே போகின்றன என்பது வரை எல்லாவற்றையும் அவர் கவனமாக உற்று நோக்கினார். குறிப்புகள் எடுத்தார். புகைப்படங்கள் எடுத்தார். தெருக்களின் வடிவமைப்புகள், கோவில்களில் இருந்து குடியிருப்புகள் வரை அவை அமைக்கப்பட்டிருக்கும் விதங்கள் என அனைத்தையும் அவர் உள்வாங்கினார். அப்போது இந்தியா மாறிக்கொண்டிருந்தது.

  இந்தியாவின் பழமையான நகர வடிவமைப்புகள், ஆங்கில அதிகாரிகளாலும் அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிற ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களாலும் அந்த வடிவமைப்புகள் அழிந்து வருவதை ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். மதுரை போன்ற கோவில் நகரங்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ள வாழ்விடங்கள், தனிமனித சுதந்தரத்தையும் கலை சுதந்தரத்தையும் இணைக்கும் கண்ணியத்துடன் உருவாக்கப்பட்டவை. தென்னிந்திய பெரும் கோவில் நகரங்களின் பண்டைய வடிவமைப்புக்கு இணையாக எங்கும் ஒரு நகரத்தைக் கூற இயலாது. ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரங்களில்கூட அவற்றைக் காண முடியாது. 

  இதெல்லாம், இந்தியப் பண்பாட்டில் மயங்கிவிட்ட ஏதோ ஒரு மேற்கத்தியரின் வர்ணனை அல்ல. மேற்கத்திய நகரங்களை முழுமைத்தன்மையுடனும் அறிவியல்பூர்வமாகவும் அழகியலுடனும் வடிவமைக்க வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையில், இந்திய நகரங்களின் பண்டைய வடிவமைப்புகளை ஆராய்ந்த ஒருவரின் அவதானிப்பு.

  தேர்த் திருவிழாக்கள், இந்திய நகர வடிவமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவை. இவற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மேற்கத்திய நாடுகளில் அவதூறுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேட்ரிக் ஹெடிஸ், தேர்த் திருவிழாக்களை நகர வீதிகளை நிர்வாகிக்கும் மிக சிறந்த ஒரு அமைப்பாகப் பார்க்கிறார். ரத வீதிகளில் இயல்பாகவே ஆக்கிரமிப்புகள் குறைந்திருக்கின்றன. மோட்டார் வாகனங்கள் வருவதற்கு முன், தெருக்களைப் பராமரிக்க இதைவிடச் சிறந்த ஒரு சமூக ஒருங்கிணைப்பை யோசிக்க முடியாது.

  நகரங்களை வடிவமைப்பதில் பேட்ரிக் ஹெடிஸுக்கு உள்ள மேதமை அனைவருக்கும் தெரியும். எனவே, அவரது ஆலோசனைகள் ஏற்கப்படுகிறதோ இல்லையோ, நிச்சயமாக அரசின் ஆலோசனைக் குழுக்களில் கோரப்படும். ஆனால், காலனிய நகராட்சி நிர்வாகங்கள், இந்தியர்களைப் பெயரளவுக்குத்தான் வைத்திருந்தன. இவற்றின் மூலம், தனது பார்வையை செயல்படுத்த முடியாது என உணர்ந்த ஹெடிஸ், சமஸ்தான அரசர்களின் ஒத்துழைப்பை நாடினார். இந்தூர் சமஸ்தானத்தில் அவரது செயல்பாடு முக்கியமானதாக அமைந்தது என்றாலும், சமஸ்தானங்களும் இறுதியில் காலனிய அதிகாரிகளின் முடிவுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தன.

  இந்திய நகராட்சி நிர்வாகங்களுக்கு ஹெடிஸ் ஒரு அறிவுரை வழங்குகிறார். ரத வீதிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு கோவில் நகரத்திலும் உள்ள நகராட்சி உறுப்பினர்களும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செயல்படுவதைவிட, நகரங்களைச் செம்மைப்படுத்த நல்ல வழி கிடையாது…

  நகரத்தை விரிவுபடுத்துகிறோம் என்று நாநூறு ஐநூறு வீடுகளை இடித்து பெரிய வீதிகளை உருவாக்குவதை அப்போதே ஹெடிஸ் எதிர்க்கிறார். தெருக்கள் ஆங்காங்கே ஒரு மர நிழலில் முடிந்து அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். மரத்தடியில் ஒரு சிறிய தெய்வச் சிலை இருக்கட்டும். அங்கே, பெண்கள் கூடிப் பேசவும், குழந்தைகள் இணைந்து விளையாடவும் ஒரு வெளி தேவை. 

  காஞ்சிபுரத்தின் பழமையான நகர வடிவமைப்பில் மிகவும் தோய்ந்து போயிருக்கிறார் பேட்ரிக் ஹெடிஸ். இந்த ஊரில் சாக்கடைகள் என்ன ஆகின்றன என்பதை ஆராய்ந்து அவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  இரண்டு இடங்களில் கழிவு நீர் வெளியேற்றும் அமைப்புகள் செயல்படும் விதத்தை நான் அவதானித்தேன். இவற்றை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் எல்லாம் செயல்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தக் கழிவு நீர், தோட்டங்களுக்குச் செலுத்தப்படுவதுடன் அதற்காகவே புதிய தோட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. இவ்விதமாக, நச்சுத்தன்மையும் துர்வாடையும் கொண்ட கழிவு நீர், அழகும் ஒழுங்கும் கொண்ட ஒரு விஷயமாக மாற்றப்படுகிறது.

  இன்றைக்கு பாதாள சாக்கடை என்கிற பெயரில், நம் சிறு நகரங்களுக்குத் தேவையற்ற ஒரு திட்டத்தை, எவரோ அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் லாபமடைய உருவாக்கி, வீதிகளை எல்லாம் மரணக் குழிகளாக்கும், கட்சி வேறுபாடின்றி கொள்ளையடிக்கும் நம் நகராட்சிக் கொள்ளையர்களைப் பார்த்தால், ஹெடிஸ் என்ன சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.

  காஞ்சிபுரத்தின் பண்டைய வடிவமைப்பைச் சார்ந்து, அதன் அடிப்படையில் நகர சீரமைப்பைச் செய்ய ஹெடிஸ் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

  1920-களில், பாலஸ்தீனின் தங்கள் பூர்விக தாயகப் பகுதிகளுக்கு யூதர்கள் திரும்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, ஐரோப்பிய யூதர்கள். அவர்கள், குடியிருப்புகளையும் நகரங்களையும் வடிவமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இஸ்ரேலின் தலைநகராக விளங்கப்போகும் டெல் அவிவ் நகரத்தினை வடிவமைக்க பேட்ரிக் ஹெடிஸின் உதவி கோரப்பட்டது. அதற்கு அவரது வடிவமைப்புத் திட்டம், காஞ்சிபுரத்தின் பழைய நகர வடிவமைப்பு குறித்த அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்திருந்தது.

  காஞ்சிபுரம் பல குடியிருப்புகளால் ஆனதாகவும், ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு ஆலயத்தை மையப்படுத்தி தன் இருப்பைக் கொண்டதாகவும் இருப்பதை ஹெடிஸ் கண்டார். இதே அமைப்பு முறையை டெல் அவிவ் வடிவமைப்பில் பயன்படுத்தினார். ஆலயங்களுக்கு பதிலாக பூங்காக்கள்.

  பாரதத்தின் திருவிழாக்கள் அவருக்கு பெரும் உத்வேகத்தை அளித்தன. சமூக ஒருங்கிணைப்புடன் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் வருடாந்திர வாய்ப்புகளாக அவர் அதைக் கண்டார். பொங்கல், தீபாவளி இரண்டுமே அவரைக் கவர்ந்தன. பொங்கலைப்போல ஒரு திருவிழாவை ஐரோப்பாவில் எண்ணிப்பார்க்க முடியாது. அங்குள்ள நான்கு பண்டிகைகளைச் சேர்த்தால்தான் பொங்கல் பண்டிகையின் அனைத்து செயல்பாடுகளும் கொண்டதாக அமையும்.

  சுத்தம், சுகாதாரம், மகிழ்ச்சி, ஆன்மிகம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் சமூக பண்பாட்டு நிகழ்வுகள்தான் இந்தியத் திருவிழாக்கள். இவற்றை நகராட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஹெடிஸ்.

  இந்தூரில் தீபாவளி கொண்டாட்டத்தை இவ்விதமாக மாற்றிக் காட்டினார். ராவணன் எரிக்கப்படும்போது சுகாதாரக்கேட்டையும் நோய் பரப்புவதையும் காட்டும் குறியீடாக, ஒரு பெரிய எலியும் சேர்த்து எரிக்கப்பட்டது. மேலும், நகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு, சமுதாய அமைப்பிலிருந்த இழிவான பார்வையை அவர் கேள்விக்குள்ளாக்கினார். அவர்கள் சாக்கடைகளில் பணி புரிவோர் அல்லர். கழிவுகளை நந்தவனங்களாக்கும் நந்தவனப் பணியாளர்கள் எனும் பார்வை மாற்றம் தேவை. இதற்கு, கழிவுநீரை சாக்கடைகளாக்குவதற்குப் பதிலாக நந்தவனத் தோட்டங்களுக்குச் செலுத்தும் முறையை இந்தியாவில் மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

  சீனாவில் இத்தகைய பாரம்பரிய முறை இருப்பதை சுட்டிக் காட்டினார். கழிவுகளாகக் கருதப்படும் அனைத்தும் சாக்கடைகளுக்குள் செல்ல வேண்டும் என்கிற ஐரோப்பிய நகர திட்டமிடுதலுக்குப் பதிலாக, அனைத்தும் மீண்டும் மண்ணை வளப்படுத்த மண்ணுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிற இந்தியப் பார்வையை அவர் வலியுறுத்துகிறார்.

  ஹெடிஸ், அடிப்படையில் ஒரு அனார்கிஸ்ட் (Anarchist). அமைப்பு சாராத சோஷலிஸ மனப்பாங்கு கொண்டவர். இந்திய ஆன்மிகத்திலும் பண்பாட்டிலும் அவருக்கு இருந்த ஈர்ப்பு வெறும் ‘exotic’ என்பதல்ல. அதைத் தாண்டியது. ஒரு பெரும் பண்பாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டு அறிதல்களை உள்வாங்குவது, நாளைய மானுடத்தின் இருப்பை குறித்து சிந்திக்கும் அனைவருக்கும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

  அவருடன் தொடர்புடைய மற்றொரு அனார்கிஸ்ட் பீட்டர் க்ரோப்போட்கின் (Peter Kropotkin). இருவருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. இருவருமே டார்வினின் பரிணாம கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில் டார்வினிய அறிவியல் ‘சமூக டார்வினியம்’ எனும் போலி அறிவியல் பார்வையை உருவாக்கியிருந்தது. காலனியத்தையும் சமூக சுரண்டலையும் ‘வலியது வாழும்’ என கூறி நியாயப்படுத்தும் ஒரு பார்வை அது.

  க்ரோப்போட்கின், அதற்கு மாற்றாக விலங்கினங்களின் பரிணாமத்தில் சமூக ஒத்துழைப்பும் பரஸ்பர உதவும் தன்மையும் கொண்ட உயிரினங்கள் வெற்றி அடைவதை முன்வைத்தார். போஸின் தாக்கம், ஹெடிஸின் நகர வடிவமைப்பிலும் இருந்ததை ஆராய்ச்சியாளர் நிருபமா கான் சுட்டிக்காட்டுகிறார். சுவாமி விவேகானந்தரின் தாக்கமும் அவரிடம் இருந்தது. இடதுசாரி சிந்தனையில் தொலைந்துபோன, ஆனால் மீட்டெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான இழை, பேட்ரிக் ஹெடிஸுடையது.

  பாரத பாரம்பரியம் குறித்துப் பேசுவோருக்கு, உண்மையில் அதனை கண்டடைந்து மீண்டும் இன்றைய சூழல்களுக்கும் சவால்களுக்கும் ஏற்ற முறையில் தகவமைக்க பேட்ரிக் ஹெடிஸ் ஒரு ஆதார அச்சு. அவரது சிந்தனையிலிருந்து வளர்ந்திருக்கும் உயிர்த்துவம் கொண்ட நகரம் (Biopolis), இன்று சூழலியலாளர்களால் நாளைய நகரங்களின் முன்மாதிரி என விவாதிக்கப்படுகிறது.

  இந்தியாவில், பேட்ரிக் ஹெடிஸின் அறிதலை முன்னெடுத்தவர் ராதாகமல் முகர்ஜி எனும் சமூகவியல் பேராசிரியர். 1930-களிலேயே அமெரிக்க சமூகவியல் ஆராய்ச்சி இதழில், மானுடத்துக்கும் இயற்கைக்குமான இசைவுடன் வளர்ச்சி அமைய வேண்டும் என எழுதியிருக்கிறார் இவர். இன்றைய சூழலியல் கோட்பாடுகளை அதிசயிக்கத்தக்க வகையில் எதிர்நோக்குகிறது இவரது எழுத்துகள்.

  உதாரணமாக – “ஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். ...உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்”.

  இது எழுதப்பட்ட ஆண்டு 1930 என்பதையும், அதுவும் ஒரு சர்வதேச சமூகவியல் இதழில் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். காலனிய காலகட்டத்தில்கூட இந்தியச் சிந்தனை எப்படி உயிர்த் துடிப்புடன் இயங்கியது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள இயலும்.

  எங்கே தவறவிட்டோம் இந்த அறிவியக்க இழையை எனும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனால், சுற்றி நோக்குகையில் அது ஒரு இன்றியமையாத வீழ்ச்சிதான்.

  பாரதப் பண்பாட்டை காலனிய வெறுப்புக்கு சற்றும் குறையாத வெறுப்புடன் அணுகுவதை மட்டுமே இடதுசாரி ‘ஃபேஷனாக’ கருதும் மனநோயும், ஊழல்களுக்கான உறைவிடங்களாக மட்டுமே நகராட்சிகளை மாற்றியிருக்கும் தனித்தன்மையும், கட்சி பேதமற்றுக்கொண்டிருக்கும் நமக்கு, நம் நகரங்களை மீண்டும் நல்ல வாழ்விடங்களாக மாற்ற உழைத்த பேட்ரிக் ஹெடிஸ் போன்றவர்கள் மங்கலான நினைவாகி மறைந்துபோனதில் ஆச்சரியமில்லை.

                                 ***


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp