முத்து காமிக்ஸும் சங்கராச்சாரியாரும்

முத்து காமிக்ஸில் ஒரு புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. பொதுவாக வெளிவரும் கௌபாய், துப்பறியும் சாகசங்களுக்கு அப்பால் ஒரு காமிக்ஸ் ஹீரோ


மு 

த்து காமிக்ஸில் ஒரு புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. பொதுவாக வெளிவரும் கௌபாய், துப்பறியும் சாகசங்களுக்கு அப்பால் ஒரு காமிக்ஸ் ஹீரோ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ‘மர்ம மனிதன்’ மார்ட்டின். அகழ்வாராய்ச்சியாளர், பத்திரிகையாளர், துப்பறிகிறவர் இத்யாதி. இவரது களம் மர்மங்கள்.  பொதுவாக மேற்கில் சம்பிரதாயமான வரலாற்றுக்கு அப்பால் ஒரு ‘மாற்று’ வரலாறு – பறக்கும் தட்டுகள், பண்டைய விமானங்கள் இத்யாதி- என ஒன்று உண்டு. பிரமிடுகளை வேற்று கிரகவாசிகள் கட்டினார்கள்; மேரி மக்தலேனா மூலமாக ஏசுவின் சந்ததிகள்; அழிந்து போன அட்லாண்டிஸ் பண்பாடு இன்றைய அறிவியல் தொழில்நுட்பங்களை விஞ்சி நின்ற ஒன்று  - இது போன்ற ஒருவித மாற்று வரலாறு. இவற்றுக்கு பெரிதாக ஆதாரங்கள் கிடையாது. அறிவியல் புனைகதை சுவாரசியமே இவற்றுக்கு உண்டு. ஆனால், கார்ல் சாகன் கூறுவது போல, இவை புனைகதை என புரிந்து கொண்டால் அவற்றைக் கொண்டு உண்மையான அறிவியல் மர்மங்களுக்கு பயணம் செய்ய முடியும். பண்டைய பண்பாடுகளில் ஒரு ஈடுபாட்டை உருவாக்க முடியும்.

எப்போதும் மார்ட்டின் கதைகளில் ஒரு எதிரி உண்டு. கறுப்பு அங்கி மனிதர்கள் (Men in Black – டாமி லீ ஜோன்ஸ், வில் ஸ்மித் திரைப்படம் மூலம் பிரபலமான பெயர்.). ரகசியங்களை காப்பவர்கள். அவற்றை வெளிப்படையாக பேசுகிறவர்களை மௌனித்து போக வைப்பவர்கள். இவர்களும் ஒருவித புகைத் தோற்றங்கள்தான் – urban legends. ஆனால் இன்னொரு தளத்தில் பார்த்தால் புனை-மனம் உருவாக்கும் அதிகார வர்க்கத்தின் பகடித் தோற்றம் அல்லது அதீத தோற்றம், ஒருவித caricature என சொல்லலாம். உலகளாவிய ஒரு அரசு இயந்திரத்தின் இருட் பாகங்கள்.

சரி இந்த முறை முத்து காமிக்ஸ்காரர்கள் வெளியிட்டிருக்கும் ‘மர்ம மனிதன்’ மார்ட்டின் சாகசம் ‘கனவின் குழந்தைகள்’. முத்து காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த சாகசக் கதை குறித்து இங்கு பேசப்போவதில்லை. ஆனால் ஒரே வரியில் சொன்னால் அண்டவெளி அயல் கிரக மனிதர்களைத் தாண்டி ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மரபுகளில் கனவுகளின் முக்கியத்துவத்தையும் அப்பழங்குடி மக்களின் பண்பாட்டு-சமூக வாழ்க்கைக்கும் மேற்கத்திய ஆஸ்திரேலிய ஆக்கிரமிப்புக்கும் இன்னும் முடிந்திடாத ஒரு நுண்ணிய மோதலையும் இக்கதை சொல்கிறது. படிக்க வேண்டிய ஒன்று.

ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ஆன்மிக மரபுகளில் கனவு என்பது மிகவும் மையமான ஒன்றாக இருக்கிறது.  ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்கள் இணையாக இருப்பதாக நம்புகின்றனர். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். இது காரண காரிய தொடர்பு உடையது.  மற்றதோ கனவுக்காலம் (Dreamtime – ஒரே வார்த்தை). ஆஸ்திரேலிய பழங்குடியினரைப் பொறுத்தவரையில் இந்த முடிவிலி சுழலாக இக்காலம் இயங்குகிறது. இதனை தன் நுண்ணுணர்வை வளர்ப்பதன் மூலம் ஒருவர் தனது அகத்தில் உணர முடியும். ஆனால் இது கற்பனை அல்ல. இன்னும் சொன்னால் நம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது இந்த கனவுக்காலம். கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த சிலரே இப்புனித கனவுக்காலத்துடனும் நனவுக்காலத்துடனும் தொடர்பு கொண்டு சமுதாயத்தை வழி நடத்துவோராக இருப்பர்.

ஆஸ்திரேலிய கனவுக்காலம் நனவுலக யதார்த்தங்களை தொடர்ந்து உருவாக்குகிறது. கனவுக்கால தொன்ம நாயகர்கள் நாயகிகள், தொன்ம விலங்குகள் – ஆகியோரின் செயல்பாடுகளிலிருந்து நனவுலக அமைப்புகள் தோன்றுகின்றன. மலைகளின் வடிவங்களில் ஆரம்பித்து பாறைகளில் இருக்கும் செந்தீட்டல்கள் வரை கனவுகாலங்களிலிருந்து உருவானவையே. ஆனால் கனவுகாலம் இறந்த காலமாக முடிவடைவதில்லை. அவை இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஒரே சமயம் காலத்துக்குள்ளாகவும் காலாதீதமாகவும் கனவுக்காலம் விளங்குகிறது. கனவுக்காலத்தை முதலில் ஐரோப்பியர்கள் பண்டைய நினைவுகளில் கற்பனை கலந்த ஒன்றாக நினைத்தனர். ஆனால் மனம் சார்ந்த அறிவியல் வளர வளர இப்பார்வை மாறியது. ஆஸ்திரேலிய கனவுக்காலம் மானுட அக பிரபஞ்சத்தையும் புற பிரபஞ்சத்தையும் இணைக்கும் அடிப்படை இயற்கை ஒன்றை விவரிக்கும் விஷயம் என்பது தெரிந்தது. கனவுக்காலம் பழமையிலும் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் தொடர்ந்து இயங்குவது. ஆஸ்திரேலிய பழங்குடிகளின் புனித இடங்கள் அவர்களின் புனித நிலவரைவியல் (sacred geometry), புனித சடங்குகள், சமுதாய உறவுகள். அறக்கோட்பாடுகள் அனைத்தும் இந்த கனவுக்காலத்தில் உற்பத்தி ஆனவையே. அவற்றுக்கான நேரடி பொருளை நாம் அனுபவிக்கும் காரண காரிய நனவுலகில் அடைந்திட இயலாது.

இதே தன்மையை நாம் இந்திய புராணங்களின் தன்மையிலும் காணலாம். அகத்தியர் பல இடங்களில் வந்திருப்பார். கன்யாகுமரி மாவட்டத்தில் தாடகை மலை இருக்கிறது. இயற்கை அமைப்புகள் புராண இதிகாச நிகழ்வுகளுடன் இணைக்கப்படுகின்றன. இது எப்படி நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? காரண காரிய அம்சங்களை நாம் கண்டுபிடிக்க முடியும்தான். ஆனால் அதைத் தாண்டி வேறொரு தளத்தில் இந்த இணைப்புகள் உருவாகின்றன. அந்த தளம் புராணத்தின் உருவாக்கத் தளம். புராணம் என்பதை வடமொழியில் ‘புரா அபி நவம்’ என்கிறார்கள். புராதனமானது ஆனால் தன்னைத் தானே புதிதாக்கிக் கொள்வது.

ஆஸ்திரேலிய கனவுக்கால தெய்வங்களுக்கும் இந்திய தெய்வங்களுக்கும் இணைத்தன்மை இருக்கிறது. பாரதத்தின் தென்னக மக்களுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கும் தொடர்பு இருப்பதை பலர் கவனித்திருக்கிறார்கள்.

சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் இதை நம் மக்களின் மனதில் பதிய வைத்தவர்களில் முதன்மையானவர் என சொல்லலாம். பரமாச்சாரியார் என்று அவரது பக்தர்களால் அழைக்கப்படும் இவரது சமுதாய கருத்துகள் புறந்தள்ள வேண்டியவை என்றாலும் அவற்றைத் தாண்டி அவரது பண்பாட்டு பார்வைகளில் சில முக்கிய அறிதல் வீச்சுகள் உள்ளன. அவர் ‘உலகம் பரவிய மதம்’ என்கிற தலைப்பில் பேசிய போது சொல்கிறார்: “ஆஸ்திரேலியப் பழங்குடிகள் நிர்வாணமாக ஆடுகிற படங்களை ஒரு புஸ்தகத்தில் பார்த்தேன். (ஸ்பென்ஸர், கில்லன் என்பவர்கள் எழுதிய Native Tribes of Central Australia என்கிற புத்தகத்தில் 128, 129 என்ற எண்ணுள்ள படங்கள்). அதன்கீழ் சிவா டான்ஸ் என்று போட்டிருந்தது. நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஆடுகிற ஒவ்வொர் நெற்றியிலும் மூன்றாவது கண் வரைந்திருக்கிறது.” பின்னர் நடனக்கலைஞரும் சங்கராச்சாரியாரின் பக்தையுமான பத்மா சுப்ரமணியம் ஆஸ்திரேலியா சென்ற போது தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்குமான பல தொடர்புகளை சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்.

இந்த தொடர்பு எப்படியும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தொடர்பு ஏற்பட்ட போது தமிழர் என்றோ அல்லது வைதீக மதம் என்றோ ஒன்று இருந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. அல்லது ஏதோ ஒரு மதம் அல்லது மொழி என வரையறைப்படுத்திய (‘சனாதன தர்மம் என்கிற பெயரற்ற தர்மம்’ இத்யாதி கூட) இருந்திருக்க வாய்ப்பில்லை என தோன்றுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து கடலோரமாக பரவிய மானுடத்தின் மிகப்பெரும் பகுதி அந்தமான் நிகோபார் வழியாக ஆஸ்திரேலியாவிலும் இதர கடற்தீவுகளிலும் பரவி பல்கிக் கொண்டிருந்த காலகட்டம். இன்றைக்கும் 69,000 க்கும் 77,000  ஆண்டுகளுக்கும் முன்னர் நிகழ்ந்த மிகப்பெரிய நிலவியல் அழிவொன்றில் தப்பி பிழைத்த மக்கள் மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்து இந்திய கிழக்கு கடற்கரை வழியாக மேலேறி, உலகமெங்கும் பரவினர். இப்படி ஒரு கோட்பாட்டை ஸ்டீவன் ஓப்பன்ஹைமர் என்பவர் முன்வைக்கிறார். அப்போது முழுவடிவம் பெற்றிராத ஆதி தொன்மக் கோட்பாடுகளை அவர்கள் கொணர்ந்தனர் என்கிறார். இன்றைக்கு நாம் காணும் தொடர்பே இல்லாத புராண மாந்தர்களின் ஆதி வடிவம் தென்கிழக்கு தாண்டிய கடற்தீவு பழங்குடியினரிடம் நிலவுவதை சுட்டுகிறார்.

புராண கதைகள் மட்டுமல்லாமல் அவை எப்படி உருவாகின்றன என்கிற உண்மையையும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் உணர்ந்து காப்பாற்றி வந்திருக்கின்றனர். இந்தியாவில் அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பதஞ்சலியும் திருமூலரும் அந்த அக அறிவியலை சீர்மை படுத்தினர். ஆக ஆஸ்திரேலிய பழங்குடியினர் தமிழரா வைதீக சமயத்தவரா என்பதெல்லாம் பொருளற்ற கேள்விகளாக இருக்கலாம். ஆனால் ஆபிரகாமியமற்ற பண்பாடாக இன்று பெரும் ஆலமரமாக நிற்பது என்கிற முறையில் பாரத பண்பாட்டை சார்ந்தவர்களுக்கு ஒரு கடமை உள்ளது. உலகமெங்கும் இப்படி அக-பண்பாடு சார்ந்த பூர்விகக் குடிகள் வாழ்கின்றனர். அவர்களின் ஆன்மிக பாரம்பரியங்களில் தொடங்கி அவர்களின் நில உரிமை வரை ஆபிரகாமிய மேலாதிக்கம் கொண்ட ஒற்றை உலகப் பண்பாட்டு பரவுதலில் ஆபத்தில் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் கடமை பாரத மக்களுக்கு உண்டு. அதை செய்ய அம்மக்களின் ஆன்மிக பண்பாடுகளுக்கும் அரசியல் உரிமைகளுக்குமான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் ஆன்மிக பண்பாடுகளை அறிவியலுடன் உரையாட செய்ய வேண்டும்.

பக்தர்களால் ‘பரமாச்சாரியார்’ என வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆஸ்திரேலியா குறித்தும் பூர்விக அமெரிக்க ஆப்பிரிக்க குடிகளுடன் உள்ளத் தொடர்புகள் குறித்தும் பாதி வேடிக்கையாக பேசிய விஷயங்களை அப்படியே நேரடியாக பொருள் கொண்டு அல்பமான பழம்பெருமையில் மூழ்கிவிடாமல் அவற்றை பூர்விகக் குடிகளின் ஆன்மிக பண்பாட்டை, சமுதாய அமைப்புகளை, நில உரிமைகளை பாதுகாக்கும் இயக்கமாக மாற்றும் முயற்சி, ‘தெய்வத்தின் குரல்’ என பக்தர்களால் சிலாகிக்கப்படும் அந்த குருவுக்கு செய்யப்படும் ஒரு உண்மையான அஞ்சலியாக இருக்கலாம் – அவர் பெயரில் உருவாக்கப்படும் தங்க சிலைகளையும் கற்கோவில்களையும், நடத்தப்படும் கனகாபிஷேகங்களையும் அவர் பெயரால் பரப்பப்படும் அற்புத கதைகளையும் விட. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com